வாழ்க்கை ஒரு வித சலிப்பை ஏற்படுத்தினாலும், எனது இந்த வேலை சலிப்பைத் தந்ததில்லை. இந்த வேலையை வைத்துக் கொண்டு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்க முடிந்திருந்தால் என்னைப் போல மகிழ்ச்சி அடையும் நபர் யாரும் கிடையாது என்கிறார் முனியாண்டி. இரண்டு காளை மாடுகள் தான் இவரது வாழ்க்கைக்கான ஆதாரம். மனைவி இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் என இருக்கும் இவரது குடும்பம் ஒரு சாதாரண விவசாய கூலிக் குடும்பம்.

 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்தது மாடுகளை வைத்து உழவு செய்யும் பணி. இன்று மாடுகளை வைத்து உழுவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் மாடுகளை வைத்து உழவு செய்யும் நிலை முற்றிலும் அழிந்து விடும் கட்டாயத்தில் இருக்கிறது. முதலில் எருமை மாடுகளை வைத்துத் தான் விவசாய நிலங்களை உழவு செய்தனர். பின் காளை மாட்டினை வைத்து உழவு வேலை செய்தனர். இந்த நிலை ஒரு 60 ஆண்டுகளாக நீடித்தது. அதன் பின் டிராக்டர்களின் எண்ணிக்கை அதிகமாக காளை மாடுகளை வைத்து உழவு செய்யும் கூலி உழவர்களின் எண்ணிக்கை கிராமங்களில் அழிந்து வருகிறது. 

 

காளை மாடுகளை வைத்துக் கொண்டு விளை நிலங்களை பணத்திற்கு உழுவது தான் எனது வேலை. எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இந்த வேலையைத் தான் செய்து வருகிறேன். காலை 6 மணிக்கு ஏர் கட்டி உழுவ ஆரம்பித்தால் மாலை 6 மணி வரை நிலத்தை உழ வேண்டும். இப்படி உழுதால் ஒரு நாள் ஒன்றுக்கு 200 வருமானம் கிடைக்கும். இதில் மாட்டிற்கு பருத்தி கொட்டை, புண்ணாக்கு, தவிடு வாங்குவதற்கு 60 ரூபாய் வரை செலவாகி விடும். மீதி இருக்கும் 140 ரூபாயில் தான் எனது குடும்பம் வாழ்வதற்கு உதவுகிறது. இது தவிர நிலத்தில் உழும் பொழுது உழுவதற்கு பயன்படும் கலப்பை(கொழுவு) உடைந்து விட்டால் அதனை மாற்ற 200 ரூபாய்க்கும் மேல் செலவு செய்ய வேண்டும். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு விலை வாசிகள் அதிகமாக இல்லாமல் இருந்தது. அப்பொழுது வாழ்க்கை நடத்துவதற்கு எந்தக் கடினமும் கிடையாது. ஆனால் இப்பொழுது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் கடப்பதற்கு மிகவும் போராட வேண்டியுள்ளது. ஒரு கிலோ அரிசி கடையில் 20 ரூபாய்க்கும் குறைவாக கிடைப்பதில்லை. அதனால் ரேசன் கடையில் இரண்டு ரூபாய் அரிசி தான் சாப்பாட்டிற்கு உதவுகிறது. இவை தவிர குடும்பத்திற்கு மற்ற செலவுகளை கையாள்வதி;ல் கடினமாகவே இருக்கிறது.

 

நிலம் வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அதனை விட மோசமானது விவசாய கூலிகளின் நிலைமை. அதிகமான வேலை. குறைந்த அளவு சம்பளம். நிலம் வைத்திருப்பவர்கள் நிலத்தை காட்டி யாரிடமாவது கடன் வாங்கிக் வாழ்க்கையை ஓட்டலாம். ஆனால் விவசாய கூலிகளுக்கு எளிதாக கடன் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதனை திருப்பிக் கொடுப்பதற்குள் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கிறது. நிலமை இப்படி இருந்தாலும் இந்த வேலை, இந்த வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது எனகிறார்.

ooOoo


இந்த டிராக்டர் தான் எனது வாழ்க்கைக்கான ஆதாரம். இந்த வண்டி ஏழ்மையில் இருந்த என்னை ஓரளவு வசதி படைத்தவனாக மாற்றி இருக்கிறது என்கிறார் தனசேகர். முதலில் ஒருவரிடம் டிராக்டர் டிரைவராக மாதம் 2000 ருபாய்க்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பின் சிறிது பணம் சேர்த்து, பைனான்ஸ் மூலம் கடன் பெற்று இந்த டிராக்;டரை வாங்கினேன். நாள் தவறாமல் உழவு வேலை கிடைப்பதால் வாழ்க்கை வசந்தமாக போய்க் கொண்டு இருக்கிறது.

 

ஒரு மணி நேரம் நிலத்தினை உழுதால் 600 ரூபாய் கிடைக்கிறது. இதில் ஒரு மணி நேரம் உழுவதற்கு 5 லிட்டர் டீசல் போதுமானது. மீதம் கிடைப்பது எல்லாம் லாபம் தான். இப்படி ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்வதால் வாங்கிய கடன், வீட்டுச் செலவு குடும்பத்தை நடத்த, பணம் சேர்த்து வைக்க என பல வேலைகளை செய்ய முடிகிறது. இப்பொழுதெல்லாம் மக்களின் வாழ்க்கை படு வேகத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து நம்மை மாற்றிக் கொண்டு ஓடினால் தான் பிழைக்க முடிகிறது.

 

இரண்டு காளை மாடுகளைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தை உழுது செம்மைப்படுத்த குறைந்தது இரண்டு நாள் ஆகும். ஆனால் டிராக்டரைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தை உழுது செம்மைப்படுத்த இரண்டு மணி நேரம் போதுமானது. அது தவிர காளை மாட்டினைக் கொண்டு ஆழமாக உழுதாலும் அதனால் ஒரு சமமாக உழ முடியாது. மேடு பள்ளம் அதிகமாக இருக்கும். ஆனால் டிராக்டர்கள் மூலம் உழுதால் நிலம் சமச்சீராக உழ முடிகிறது. காளை மாட்டினை வைத்து உழுவதால் அந்த நிலத்தில் புல் முளைக்க அதிக நாள் ஆகும். ஆனால் டிராக்டர்கள் வைத்து உழுதால் விரைவில் புல் முளைத்து விடும். இது ஒன்று தான் டிராக்டரை வைத்து உழுவதால் வரும் நஷ்டம்.

 

காளை மாட்டினை வைத்து உழுபவர்கள் அதனை பராமரிக்க அதிக சிரமம் எடுக்க வேண்டும். மாட்டினை கட்டிப் போட என தனியாக மாட்டுத் தொழுவு வேண்டும். அதற்கு வைக்கோல், தண்ணீர் பார்த்து வைக்க வேண்டும். அது போடும் சாணியை அள்ள ஒரு ஆள் வேண்டும். திடீரென்று மாட்டிற்கு உடல் நிலை சரியில்லை என்றால் அதனை விற்று விட்டு வேறு மாடு தான் வாங்க வேண்டும். ஆனால் டிராக்டருக்கான பராமரிப்புச் செலவு குறைவு. ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விடலாம். ஏதாவது ரிப்பேர் வந்தால் உடனே சரி பார்த்து விடலாம். அதற்கு ஆகும் செலவை ஈடுகட்ட, உழவுக்கு கூப்பிட்டு வரும் விவசாயிகளின் தலையில் கை வைத்து விடலாம். நாலு மணி நேரம் உழுதிருக்கிறது என்றால் நிலத்தின் உரிமையாளரிடம் நான்கரை மணி நேரம் என சொல்லி செலவை சமாளித்து விடலாம் என்கிறார் கண்ணைச் சிமிட்டி.

- திருமலை கோளுந்து

http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=05010803&week=may0108