இந்தியாவில் ஆண்டுக்கு 5,000 முதல் 9,000 வரையிலான வரதட்சணைக் கொலைகள் நடக்கின்றன (15.4.1995)6 இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் 1989-ஆம் ஆண்டு பதிவான வரதட்சணைப் படுகொலை 4,821 ஆகும். இரு மணி நேரத்துக்கு ஒன்றாக நாள் ஒன்றுக்கு 13 வரதட்சணைக் கொலைகள் நடக்கின்றன. இது 1983-இல,; நாள் ஒன்றுக்கு மூன்று மட்டுமே. 1986-இல், ஆறாக இருந்தது. அதாவது 1983-இக்கும் 1989-இக்கும் இடையில் 400 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. (1.10.1990)6


டெல்லியில் 1985-இல், பதிவான வரதட்சணை படுகொலை 43-இல் இருந்து 1988-இல், 71ஆக அதிகரித்துள்ளது. இது 1989 ஜனவரி முதல் 1990 மார்ச் வரை 132 பேர் கொல்லப்பட்டுள்ளனர். (16.5.1990)6

1998-இல் இந்தியாவில் பதிவுக்கு வந்த வரதட்சணையைச் சார்ந்து படுகொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 6,917 ஆகும். (16.6.2000)6. இந்தியாவை நாம் எடுப்பின் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு வரதட்சணைக் கொலை நிகழ்கிறது. இது வருடம் கிட்டத்தட்ட 9,000 கொலைகளாக உள்ளது. 1989 முதல் 1991 வரையில் 18,000 பெண்கள் வரதட்சணைக்காகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர். மாமியார் மற்றும் கணவனின் சித்திரவதைக்குள்ளாகி 20,000 பேர் தற்கொலை செய்துள்ளனர். தீக்காயத்துடன் கூடிய 13 பிரேதங்கள் (உடல்கள்) நாளொன்றுக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அகமதாபாத்தின் பிரேதச் சாலைக்கு வருகின்றது. வரதட்சணைக் கொடுமையால் இறந்ததைச் சமாளிக்க பொலிசுக்கு 20,000 ரூபாயும், நீதிபதிக்கு 25,000 ரூபாயும் கொடுத்து தப்பித்து வருகின்றனர்.48


தில்லியில் வரதட்சணைப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இது 1985-இல், 43ஆகவும் 1988-இல், 71 ஆகவும், 1989 ஜனவரி, பிப்ரவரியில் மட்டும் 132 ஆகவும் அதிகரித்து வந்துள்ளது. இது குஜராத் மாநிலத்தில் நாளுக்கு 13 ஆகவுள்ளது. பெங்கள+ரில் வரதட்சணைக் கொலை, விபத்து, தற்கொலை என்ற பெயரில் பொலிசாரல் பதியப்பட்ட வரதட்சணைக் கொலைகள் 1997-இல், 1,133 ஆகவும், 1998-இல், 1,248 ஆகவும் 1999 ஜீலை வரை 618 ஆகவும் இருந்தது. பெரும்பாலும் இளம் பெண்கள் பலியாவதுடன் மாதம் 180 என்ற விகிதத்தில் இது உள்ளது. கர்நாடகத்தில் 1997-இல், பதிவு செய்யப்பட்ட விபத்து மரணங்களின் எண்ணிக்கை 3,826 ஆகும். இதில் 1,715 மரணங்கள். அதாவது 50 சதவீதமானவை ~ஸ்டவ்| வெடித்ததால் ஏற்பட்ட தீயினால் மருமகள்களுக்கு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. பண்டிகைக் காலத்தில் விக்டோரியா மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 10 பேர் தீ விபத்தால் கொண்டு வரப்படுகின்றனர். மற்ற நாட்களில் இது ஏழாக உள்ளது. பண்டிகைக் காலத்தில் பெண் மீதான வரதட்சணைக் கோரிக்கை அதிகரிப்பதே இவ்விபத்துகளுக்குக் காரணமாக உள்ளது. (செப் - டிசம்பர் 99)56


இந்தியாவிலுள்ள சில மாநிலங்களின் வரதட்சணைக் கொலைகளை நாம் மேலே காண்கின்றோம்;. வீட்டு வேலைக்காரி வேலை மட்டுமல்லாது ஆணுக்கு இன்பத்தைக் கொடுக்க வந்தவள் சொத்தையும் கொண்டுவர வேண்டிய துர்ப்பாக்கியம். ஆனாலும் பெண் புகுந்த வீட்டில் எதையும் பெறுவதில்லை. கொடுமை, சித்திரவதை, வேலைக்காரிப் பாத்திரம் இதையே தனது வாழ்க்கையாகப் பெற்று அனுபவிக்கும் இந்தியப் பெண்களின் நிலை கேவலகரமானது.


ஆணின் சுகத் துக்கத்திற்கு ஆடவேண்டி பெண் எரிக்கப்படுகின்றாள் அல்லது கொல்லப்படுகின்றாள். ஆணுக்காக வாழ வந்த இடத்தில் சொத்தைக் கோரிக் கொல்லப்படுகின்றாள். கையாலாகாத ஆணாதிக்கம் பெண்ணிடம் கோரும் போது அது தீயாகின்றது. இந்தியாவில் எண்ணிக்கை அற்ற பெண்கள் வரதட்சணைக்காகக் கொல்லப்படுகின்றார்கள். இவை கூடச் சட்டத்தின் பதிவுகளில் வந்து விடுவதில்லை. அப்படி ஆணாதிக்கத் தடைகளையும் மீறி வந்தவை எல்லாம் நீதி பெற்று விடுவதில்லை.


பெண்ணைப் பாலியலில் சூறையாடி, அவள் மூலமே சொகுசாக வாழ்ந்த படி, அவளின் சொத்திலே அவளைக் கொண்டே கொலைக் கருவியை வாங்கி, அவளையே கொல்லும் கொடூரம் காட்டுமிராண்டிச் சமூகத்தனமானவை.


சீதனம் அல்லது வரதட்சணை என்பது ஆணாதிக்கத்தின் பின்னால் உருவான ஒரு பண்பாடு. இது சமுதாயத்திற்குச் சமுதாயம் வேறுபட்டுக் காணப்படுவதுடன் இதன் அர்த்தங்கள் கூட மாறுபட்டுக் காணப்படுகின்றது. ஆண் பெண்ணுக்கு இடையில் வரைமுறையற்ற புணர்ச்சி நிலவிய போது குடும்பம் இருக்கவில்லை. பின்னால் வளர்ச்சி பெற்ற பல்வேறு சமூகப் போக்கிலும் குடும்பம் தோன்றி விடவில்லை. தனிச்சொத்துரிமை உருவாக்கிய குடும்பம் தான் சீதனத்தின் ஊற்று மூலமாக இருந்தது. இந்தக் குடும்பத்தில் ஆணாதிக்கம் தனது அதிகாரத்தைக் கொண்டு நிறுவிய போது பெண் வெளியில் வேறு குடும்பத்தில் வாழ்ந்தாள். அவளை விலைக்கு வாங்குதல் அல்லது அன்பளிப்பு கொடுத்து பெண்ணைப் பெறுவது என்ற வழிகளில் தொடங்கிய ஆணாதிக்கத்தின் வளர்ச்சியுடன் சீதனமும் வளர்ச்சி பெற்றது.


இந்தச் சீதனத்தில் இரு போக்குகள் பிரதான பிளவைக் கொண்டு வளர்ச்சி பெற்றது. தாய் வழி முறையிலும், தந்தை வழி முறையிலும் பெண்ணின் நிலை தீர்மானிக்கப்பட்டு, அவள் வாழும் இடமும் தீர்மானிக்கப்பட்டது. தாய் வழி சென்று தாயின் வீட்டில் வாழ்ந்த பெண்களை நோக்கி வந்த ஆண்கள் சீதனத்தைக் கொடுப்பது நீடித்ததுடன், அச்சொத்தின் உரிமைகளைக் கூடப் பெண் பெற்று இருந்தாள். மறுதலையாகத் தந்தைவழி குடும்பத்தில் ஆண் வீட்டுக்குச் செல்லும் பெண் பெண்ணுக்குக் கொடுத்த சொத்தைப் படிப்படியாக இழந்து சொத்தற்றவள் ஆக்கப்பட்டாள்.


இதில் கூட பின்னால் இரு பிளவுகள் ஏற்பட்டது. பெண் வழியில் பெண் வீட்டுக்கு வரும் ஆண், கொண்டு வந்த சீதனத்துக்குப் பதில் பெண் கொடுப்பதும் என்ற இருவழிகள் இதற்குள் ஏற்பட்டது. இது போல் ஆண் வழி சமூகத்தில் ஆண் வீடு செல்லும் பெண், சீதனம் கொண்டு செல்லுதல் என்ற போக்குடன் அங்கும் இரு வழிகள் உருவானது. மொத்தத்தில் நான்கு வழிமுறைகளில் இச்சீதனப் போக்குகள் இன்று உள்ளது. அதே போல் பெண்ணின் சொத்துரிமை பற்றிய பொது விதிகள் நான்கு போக்காக உள்ளது. இதைவிட சீதனம் கொடாத முறையென ஐந்தாவது போக்கும் இன்று வரை உள்ளது.


தாய்வழியில் செல்லும் ஆண் பெண் சார்ந்த குடும்பத்தில் பெண் அதிகமான சுதந்திரத்தையும், ஆண்வழிச் செல்லும் பெண், ஆண் சார்ந்த குடும்பத்தில் அதிக அடிமையாகவும் வாழ்வது எதார்த்தமானது. இது இன்று இந்தியாவில், ஆண் வழியில் பெண் செல்லும் தமிழ் நாட்டுக்கும், பெண் வழி செல்லும் கேரளா மற்றும் இலங்கையிலுள்ள தமிழ்ப் பகுதிக்கும் இடையில் பெண்ணின் நிலைமை நன்கு வேறுபட்டு உள்ளது. இது கல்வி, சொத்துரிமை, வரதட்சணைக் கொடுமை..... போன்றவைகளில் துல்லியமாக வேறுபடுகின்றன. இன்று உருவாகியுள்ள தனிக் குடும்பங்களில் சில குறிப்பான வேறுபாடுகள் இருந்த போதும் மரபுரீதியான தன்மை பெண்கள் விடயத்தில் இரு பிரதேசத்திலும் பெண்ணின் நிலையில் மாறுபாட்டைக் காட்டுகின்றது.


சீதனம் தனிச் சொத்துரிமையின் சொத்துச் சேர்க்கும் வகையில் துளிர்விட்டது. ஆரம்பத்தில் ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதியாக இருந்த பெண்ணின் தந்தை பெண் வழிச் சமூகத்தின் எச்சச் சொச்சத்தின் ஆளுமையுடன் தன்னை நோக்கி வரும் ஆணிடம் பெண்ணை அடைவதற்குச் சீதனத்தைக் கோரியதன் மூலம் தந்தையின் குடும்பத் தனிச் சொத்துரிமையின் பலம் அதிகரித்தது. இவைகளை ஒட்டிப் பல தகவல்களை மேலே நான் விவாதித்துள்ளளேன். இதனால் உருவான சீதனம் வளர்ச்சி பெற்று மாறிவந்த காலத்தில் தனிக்குடித்தனம் சென்ற குடும்பங்களின் அஸ்திவாரமாகியது. அதாவது இரண்டு பேர் தங்கள் வாழ்க்கையை உருவாக்க சீதனம் மூலமாகியது. இதிலும் கூட சில திரிபுகள் நடந்தன. ஆரம்பக் காலத்தில் தனிக் குடித்தனம் செல்லும் குடும்பத்துக்கு அங்கு சுற்றியிருந்த சமூகம் வீடு அமைத்து அடிப்படைப் பொருட்களைக் கொடுத்துதவி வாழ்வதற்குச் சமூகம் வழிகாட்டியது. பின்னால் இது தனிச் சொத்துரிமையின் குணாம்ச ரீதியான மாற்றத்தால் அது படிப்படியாக நீங்கி சீதனம் அவ்விடத்தை நிரப்பத் தொடங்கியது. இதிலும் குடும்பம் அந்தஸ்துடன் இணைவது அல்லது இணைத்து வைப்பது தீவிரமாகி இதுவே காதலாகிய நிலையில் வாழ்க்கைக்குரிய சாதனங்களும் வேறுபடத் தொடங்கியது. இதிலும் சீதனத்தின் முக்கியத்துவம் அவசியமாகிச் சமுதாயம் வழங்கி வந்த அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் முறை காலாவதியாகியது.


இன்று சில சமூகத்தில் அதன் எச்சச்சொச்சங்கள் நீடித்த போதும் சீதனத்தின் முக்கியத்துவம் முதன்மை பெற்றதாக உள்ளது. வறுமையில் சிக்கியுள்ள குடும்பத்தில் சமூகத்தின் கூட்டான பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வு ஆதாரங்களை வழங்குவதன் மூலம் இது இன்றும் அடிப்படைத் தேவையாக உள்ளது. இது இன்று சீதன வடிவில் பெண்ணிடம் மட்டும் கோருவதாக மாற்றம் கண்டுள்ளதுடன் தேவைக்கும், ஆடம்பரத் தனிச் சொத்துரிமைக்கும் ஆதாரமாக உள்ளது. சீதனம் இரண்டு தளத்திலும் உள்ளதுடன் இதில் தனிச்சொத்துரிமை அமைப்பின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் மற்றது தனிச்சொத்துரிமையின் ஆடம்பரத்திலும் உள்ளது. இதில் பெண்ணை மட்டும் கோருவது ஆணாதிக்க வடிவமாக வளர்ச்சிபெற்றது.


சீதனத்தை நாம் எதிர்க்கும் போது இவ்விரண்டு வேறுபட்ட தன்மையையும் புரிந்து கொள்வது அவசியமாகும். இதில் பெண்ணை நோக்கி மட்டும் கோருவது அடிமட்டக் குடும்பங்களிலும் அதிகரித்து வருகின்றது. சமூகத்தின் பங்களிப்பைச் சொத்துரிமையின் வடிவில் நோக்கி எதிர்பார்ப்பதும், பெண்ணிடம் சீதனம் கோருவதும் மேல்மட்ட ஆதிக்கச் சமூகத்தின் பாதிப்புக்குள்ளாகிக் கோருவது அதிகரிக்கின்றது. இருந்த போதும் இதை விமர்சனக் கண்கொண்டு அணுகுவதும் தேவையைப் புரிந்து கொண்டு விமர்சிப்பதும் அவசியமாகும். மேல்மட்டச் சீதன முறைகளை முற்றாக மறுத்து போராடவேண்டும். சீதனம் என்ற முறை மேல் மற்றும் கீழ் மட்ட ஏழைக் குடும்பங்களில் என எங்கு எழுப்பப்படினும் அதை மறுத்து எதிர்த்துப் போராடுவது அவசியம். ஏழைக் குடும்பத்தின் தேவையைக் கூட்டுச் சமூகச் செயல்பாட்டின் ஊடாகத் தீர்க்கக் கோருவதும், அதை மாற்றாக முன்வைப்பதும் அவசியமாகும். இதுவே சீதன ஒழிப்பின் தேவைக்கும், ஆடம்பரத்துக்குள்ளும் உள்ள சீதனத்தை ஒழிக்க நாம் கொள்ளும் பாதையாகும்.


கடந்த சமுதாயத்தில் பெண் சாமாத்தியப்பட்டால் திருமணம் என்ற முறையில் பெண்ணுக்குத் தேவையான பொருட்களை வாழ்க்கையை ஒட்டிக் கொடுப்பது வழக்காக இருந்தது. இன்று சாமத்தியப்பட்ட பெண் உடனடியாகத் திருமணம் செய்வதில்லை. ஆனால் பரிசுப் பொருட்கள் கொடுப்பது பண்பாக உள்ளது. இதுவும் கூட ஏழைக்கும், பணக்காரனுக்கும் இடையில் தெளிவான வேறுபாடு உள்ளது. ஏழைப்பெண் மாற்று உடுப்புகூட இன்றி உள்ள போது கொடுப்பது அவளின் மாற்று உடுப்பாக உள்ளது. அதே நேரம் பணக்காரக் கூட்டம் ஆடம்பரத்தையும், விளம்பர விபச்சாரத்தையும் பெண்ணின் பண்பாக்கி அதில் பெண்ணைப் பயிற்றுவிக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும் பெண் விளம்பரப்படுத்தப்படுகின்றாள்;. ஆணாதிக்கம் கூர்மையாக அப்பெண் மீது தனது ஊடுருவலை நடத்துகின்றது என்ற உண்மையை இரு தரப்பும் பார்ப்பதில்லை. பெண்ணின் சாமத்தியப்படுதலை இருதளத்திலும் பகிரங்கப்படுத்துவதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். அதே நேரம் இது வழக்கில் உள்ளபோது நடைமுறையில் இரண்டு வேறுபாட்டையும் புரிந்து கொண்டு அணுகவும் வேண்டும்.


நாம் கடவுளை எதிர்த்து போராடும் போது ஏழைக் குடும்பம் நிம்மதியைக் கோரி வணங்கும் போது அதன் ஆத்மார்த்த நிம்மதியைப் புரிந்து கொண்டே நாம் போராடுகின்றோம். மதத்தின் பிற்போக்கை அம்பலப்படுத்தும் போது ஏழையின் கண்ணீரைப் புரிந்து கொண்டு கடவுள் தீர்த்தாரில்லை என்பதையும், அதேநேரம் போராட்டத்தின் மூலமே கண்ணீர் சிந்துவதை ஒழிக்க முடியும் என்பதையும் புரிய வைக்கின்றோம் அல்லவா! அதேபோல் மத நிறுவனங்களையும், அதன் கோட்பாட்டுத் தளங்களையும், அதன் அனைத்து வடிவங்களையும் ஈவிரக்கமின்றி தகர்க்கும் போது மறுதளத்தில் சாதாரண மனிதன் கையைக் கூப்பி கும்பிடும் போது அதில் நாம் இரக்கம் கொள்ள வேண்டும்.


சமூகப் பொருளாதார ரீதியில் விடுவிக்காத வரை இது நீடிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு போராட்ட வழியைக் காட்ட வேண்டும். இது போல் தான் ஏழையின் சாமத்தியச் சடங்குகளை நாம் அணுகவேண்டும். பெண்ணின் சாமத்தியம் அக்குடும்பத்தின் கடன் சுமையை அல்லது அப்பெண்ணின் குடும்ப வாழ்க்கையின் ஆதாரத்தைக் கொடுப்பதாகப் பல ஏழைக் குடும்பத்தில் காணப்படுகின்றது. பணக்காரக் குடும்பத்தில் சாமத்தியச் சடங்கு முறையை நாம் அதன் கோட்பாடு மற்றும் அதன் விளம்பரத்தனத்தைத் திட்டவட்டமாக எதிர்த்துப் போராட வேண்டும். இதே நேரம் ஏழைக் குடும்பத்தில் இது நிகழும் போது இதன் பாதகத்தைச் சுட்டிக்காட்டவும் குடும்பங்களின் பரிதாப நிலைக்குப் போராடுவதும், சமூகக் கூட்டு மூலம் இவைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை நடைமுறை ரீதியாகப் புரியவைத்து தீர்க்க வேண்டும். அதாவது ஏழைக் குடும்பப் பிரச்சினைகளைக் கூட்டுச் செயல் மூலம் தீர்ப்பது, அணுகுவது என்ற பொது வழி நடைமுறைக்குக் கொண்டு வரும் போது சீதனம் தானாகவே ஏழைக் குடும்பத்தில் ஒழிந்து போகும்.