book _1.jpgமு ஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம் அதிகாரம் செலுத்த முனைவதே, முஸ்லீம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உருவாவதற்கான அடிப்படையாகும். இந்த உண்மையைத் தமிழர் தரப்பு எப்போதும் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது. பின்னர் விதாண்டவாதமாகவே தமது அடாவடித்தனங்களை நியாயப்படுத்துகின்றனர். இதன் மூலம் தமிழர் முஸ்லீம் விரோத உணர்வுகளை அன்றாடம் தீனிபோட்டு வளர்க்கின்றனர். இதுதான் சுனாமியின் பெயரில் உருவான பொதுக் கட்டமைப்பிலும் நிகழ்ந்துள்ளது. முஸ்லீம் மக்கள் எதைத்தான் கோருகின்றனர்? தமது சொந்தப் பிரச்சனையைத் தம்மிடமே விட்டுவிடும்படியே தமிழ் மக்களிடம் கேட்கின்றனர். இதற்கு இல்லை என்பதே, குறுந்தேசிய, தமிழ் தேசிய வீரர்களின் நிலைப்பாடாகும்.

 

தமிழ் மக்கள் தமது பிரச்சனையைத் தம்மிடம் விட்டுவிடும்படி சிங்களப் பேரினவாதிகளிடம் எப்படி கோருகின்றனரோ, அதைபோல் முஸ்லீம் மக்கள் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் என இரு தரப்பிடமும் கோருகின்றனர். இதை மறுத்து நிற்கும் தமிழ் தரப்பு முஸ்லீம் மக்களின் மேல் அதிகாரம் செலுத்த முனைவது, ஒரு ஜனநாயக விரோதமான செயலாகும். முஸ்லீம் தரப்பு தமிழர் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு மனிதவிரோத உரிமையைக் கோரவில்லை. மாறாகத் தமது பிரச்சனையைத் தம்மிடம் விட்டுவிடும்படியே கோருகின்றனர். இது அவர்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையாகும். இதை யாரும் கொச்சைப்படுத்த முடியாது.


இங்கு இரண்டு இனங்கள் இணைந்து வாழும் கோட்பாடு என்பது, இரண்டு பகுதியும் பரஸ்பரம் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில், இணங்கி செயல்படுவது மட்டும்தான் சாத்தியம். இதுவே நியாயமானது கூட. இன்று சுனாமிப் பொதுக்கட்டமைப்பு இதைத் தெளிவாக, முற்றாக மறுக்கின்றது. அதாவது உண்மையில் புலிகளே இதை மறுக்கின்றனர் என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டு, முஸ்லீம் மக்களிடம் தமிழர் தரப்பாக எமது குறுந்தேசியக் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டியவராக நாம் உள்ளோம். அரசும், நோர்வேயும் முஸ்லீம் மக்களின் சமவுரிமையை இந்த இடத்தில் மறுக்க எந்தவிதமான தர்க்க நியாயங்கள் எவையும் உண்மையில் இருக்கவில்லை. உண்மையில் இதைப் புலிகளே திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இன்று பொதுக் கட்டமைப்பில் கிடைத்துள்ள பிரதிநிதித்துவம் கூட புலிகள் வழங்க முன்வரவில்லை. அரசு தான் தனது சொந்த பங்கில் இருந்து தனது சொந்த அரசைப் பாதுகாக்க வழங்கியது.


சிங்களப் பேரினவாதிகளைப் போல் மனிதவிரோதிகளாகவே தொடர்ந்து இருப்போம் என்பதைத் தமிழர் தரப்பு மீண்டும் மீண்டும் நிறுவ முனைகின்றது. அதைத்தான் சுனாமியின் பெயரில் புலிகள் உருவாக்கிய பொதுக்கட்டமைப்பு ஊடாக அப்பட்டமாகவே பிரகடனம் செய்துள்ளனர். புலிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம், திட்டவட்டமாகவே முஸ்லீம் மக்களுக்கு எதிராகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் புலிகளே முஸ்லீம்களுக்கு எதிராக மீண்டும் இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெரும்பான்மை முஸ்லீம் மக்களின் பிரச்சனையில் தலையிடாத ஒரு பொதுக்கட்டமைப்பைப் புலிகள் எந்த இடத்திலும் கோரவில்லை. மாறாக அதை தம்மிடமே தரப்படவேண்டும் என்ற அடாத்தாகவே நின்று, நீண்ட இழுபறிகளுக்கு ஊடாகப் பெற்றுக் கொண்டதையே ஒப்பந்தம் எடுத்துக் காட்டுகின்றது. நோர்வே பிரதிநிதி சிறப்பாக முஸ்லீம் மக்களைச் சந்தித்த போதே, இது அம்பலமாகத் தொடங்கியது. ஆம் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களின் பிரச்சனையில் தமிழர்கள் மூக்கை நுழைப்பது ஏன்? இதுவே இன்றைய பிரச்சனையின் அடிப்படையாகும்.


இதைத் திசைதிருப்பும் வகையில் ஒரு மையமான வக்கிரமான விவாதம் ஒன்று திட்டமிட்டு நகர்த்தப்படுகின்றது. சில முஸ்லீம் கட்சிகள் எடுக்கும் நிலைப்பாட்டை, வெறுமனே மூன்றாம் தரப்பாகக் கையெழுத்திட அனுமதிக்காமை என்று காரணங்கள் கற்பிக்கப்படுகின்றனர். இது அப்பட்டமாகவே தவறானது. மாறாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக, அவர்களின் சார்பிலும் தமிழர் தரப்பாகப் புலிகள் செய்து கொண்ட ஒப்பந்தமே அனைத்துக்குமான அடிப்படையாகும். இந்த மனித விரோதத்தை நாம் எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது.


இதை மூடிமறைக்கும் வகையில் முஸ்லீம் தரப்பு மீது, குறுந்தேசியத் தமிழர்களும், அதன் பினாமிகளும் சேறடிக்கின்றனர். மூன்றாம் தரப்பாகக் கையெழுத்திட அனுமதிக்கவில்லை என்ற எல்லைக்குள் பிரச்சனையைக் குறுக்கி, பின் புலிகள் தரப்பு குறுகிய நியாயவாதங்களை முன்வைக்கின்றனர். இங்கு மூன்றாம் தரப்பாகக் கையெழுத்திட அனுமதிக்காமை ஒரு ஜனநாயக கோரிக்கையாக இருக்கலாமே ஒழிய, கையெழுத்திட்டால் இது முஸ்லீம் மக்களின் பிரச்சனைக்கான ஒரு தீர்வாக அமைந்துவிடாது. இங்கு மூன்றாம் தரப்பாகக் கையெழுத்திட அனுமதிக்காமை ஒரு மனித விரோத குற்றமாகும். கையெழுத்திடல் என்பது முஸ்லீம் தரப்பு கோரிக்கைகளை ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளும் வகையில் மட்டும் கையெழுத்து இடுவதைக் குறிக்கின்றது. இதை மறுக்கும் புலித்தரப்பின் விதண்டாவாதங்களைப் பார்ப்போம்.


1. இலங்கையில் இரண்டு கட்டுப்பாட்டுப் பிரதேசங்களே உள்ளன. எனவே அதன் சார்பாக இருவரே கையெழுத்திட முடியும்.


2. முஸ்லீம் தரப்பு ஒரு பொதுக்கட்டமைப்பைக் கோரவில்லை. தமிழர் தரப்புதான் கோரியது. எனவே அவர்கள் தான் கையெழுத்திட முடியும்.


3. முஸ்லீம் தரப்பு அரசாங்கத்துடனும் எதிர்க்கட்சியுடனும் சேர்ந்துள்ளனர். எனவே அவர்கள் இதில் எதையும் கோர உரிமையில்லை.


4. முஸ்லீம் அரசியல் கட்சிகள் தான் இதைக் குழப்புகின்றனர். ஏனென்றால் அவர்கள் தமது சொந்த அரசியல் செல்வாக்குக்காக இப்படி செயல்படுகின்றனர்.


5. முஸ்லீம் பொதுமக்களும், அவர்களின் பொது அமைப்புகளும் இதை ஏற்றுக் கொள்கின்றன.


6. இந்தப் பொதுக்கட்டமைப்பு புலிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்குவதால் அதைப் புலிகளே தீர்மானிக்க முடியும்.


7. தமிழர்கள் போராடிப் பெற்றதில் இருந்து முஸ்லீம் மக்கள் மீன் பிடிக்க முடியாது. அதாவது முஸ்லீம் மக்கள் எமது போராட்டத்தில் குளிர்காய முடியாது.


8. முன்பு முஸ்லீம் மக்கள் அப்படிச் செய்தார்கள், இப்படிச் செய்தார்கள் என்று பல கருத்துகள். இதில் சில உண்மைக்கு புறம்பான தமது கற்பனைக் கதைகளைக் கூறுவது. இதை மெருகூட்டத்தான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன் என்று யாழ்ப்பாணத் தேசிய மொழியில் பினாற்றுவது.


9. முஸ்லீம் மக்கள் தமிழர்கள் தான். அவர்கள் மதத்தால் மட்டுமே வேறுபடுகின்றனர். ஆகவே நாமே (புலிகளே) முடிவெடுக்க முடியும்.


10. முஸ்லீம் மக்களிடம் பேசுவது என்றால் யாரிடம் பேசுவது. ஒன்றுக்கு மேற்பட்ட தலைமைகள் உள்ளன.


11. முஸ்லீம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது தானே. இதைவிட என்னதான் அவர்கள் கேட்கின்றனர்.


12. முஸ்லீம் மக்கள் எங்கே போராடியுள்ளனர். போராடாமல் உரிமையைக் கோரமுடியாது.


இப்படி பற்பல. ஒரு இனத்தினுடைய அவலத்தின் மேல் எழுந்த வக்கிரமான ஒரு கொக்கரிப்பாகவே இவை வெளிவந்தன. இவையெல்லாம் உப்புச்சப்பற்ற அடிப்படைகளற்ற மனிதவிரோத வாதங்கள். நலமடிக்கப்பட்ட சமூக முட்டாள்தனத்தின் மீது இப்படிக் கருத்துரைப்பதில், சமூக விரோத வக்கிரமே பினாற்ற முடிகின்றது. உண்மையில் விடையத்தைத் திசை திருப்பி விடும் ஒரு விதண்டாவாதம் ஆகும்.


முஸ்லீம் மக்களின் பிரச்சனைக்குள் அதிகாரத்தைச் செலுத்தும் உரிமையை, உங்களுக்கு (குறுந்தேசிய தமிழருக்கு) யார் தந்தார்கள்? இதைப் பலாத்காரமாகக் குத்தகைக்கு எடுத்து ஆக்கிரமிக்கும் உள்ளடக்கம் தான், பிரச்சனைக்கான மூலமாகும். இதை விரிவாக ஆராய்வோம்.


முதலில் முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளைத் தமிழர் தரப்பு ஒருதலைப்பட்சமாகப் பலாத்காரமாகத் தமதாக்கி, அவர்கள் மீது அதிகாரத்தைச் செலுத்த முனைவதே பிரச்சனைக்கான அடிப்படையாகும். புலிகளும், புலித்தரப்பு பினாமிகளும் முன்வைக்கும் அனைத்து வாதத்துக்கும் எதிரான மற்றும் தெளிவான பதில் இதுவே. முஸ்லீம் மக்கள் தமக்காக, தெளிவான தலைமைகளையும் பொதுவான சமூக அமைப்புகளையும் கொண்டுள்ளனர். அவர்கள் தமிழரைத் தமது சமூகத் தலைமையாகவே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கான எந்த அடிப்படையும் அவர்களிடையே கிடையவே கிடையõது. அப்படி இருக்க, அவர்களுடைய பிரச்சனையை அவர்களுடன் தீர்க்காமல், அவர்களுக்கு அன்னியமான துப்பாக்கி ஏந்திய புலிகள் தமது துப்பாக்கி முனையினால் தீர்க்க முனைவது தான் ஏன்? இவையே முரண்பாட்டுக்கான அடிப்படையாகும். முஸ்லீம் மக்கள் மேலான தொடர்ச்சியான ஒரு ஒடுக்குமுறையைப் புலிகள் கையாண்டு வரும் நிலையில், பொதுக்கட்டமைப்பு புதிய வடிவில் அவர்கள் மேலான மற்றொரு அடக்குமுறையாக உள்ளது.


இலங்கையில் இரண்டுக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் உள்ளது என்பது எதார்த்தம். இந்த எதார்த்தம் யுத்த அடிப்படையிலும், தமிழ் மக்களின் பிரச்சனையைச் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தீர்க்கப்பட வேண்டிய அடிப்படையிலும் இது கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவைதான். ஆனால் இலங்கையில் தேசிய இனச் சிக்கல்களை நியாயமாகத் தீர்க்க வேண்டும் என்றால், ஒரு தரப்பாக மட்டும் புலிகளுடன் பேசிப் பயனில்லை. அவர்களுடன் பேசப்பட வேண்டும் என்பது இதில் இருந்து முற்றிலும் வேறு. இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது வேறு. ஏனென்றால் இலங்கையில் நான்கு இனங்கள் உள்ளன. எனவே மோதும் இருதரப்பு மட்டும் பேசுவதால், உண்மையில் இனச் சிக்கலைத் தீர்க்க முடியாது. ஒரு தரப்புடன் பேசுவதன் மூலம், பேரங்களை இனவாத எல்லைக்குள் அவர்களுடன் மட்டும் செய்ய முடியும். உண்மையான தீர்வு மலையக, முஸ்லீம் மக்களை உள்ளடங்கிய பேச்சுவார்த்தை ஊடாகத்தான், இலங்கையில் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காண முடியும் என்பது குறைந்தபட்ச நிபந்தனையாகும்.


இந்த நிலையில் சுனாமிக்கான நிவாரணம் இதனுடன் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத ஒன்று. அத்துடன் அது பல இனங்களை உள்ளடக்கிய வகையில் உள்ளது. இனங்கள் எதார்த்தத்தில் பிளவுபட்டுள்ள நிலையில், அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளும் ஒரு ஜனநாயகமுறையை அடிப்படையாகக் கொண்டு அணுகாத அனைத்து முறைமைகளும் இனப்பிளவுகளை மேலும் அகலமாக்குகின்றது. மக்களின் விருப்பத்தை உள்ளடக்காது உருவானதே இந்தப் பொதுக்கட்டமைப்பு. இதில் கையெழுத்திட்ட தரப்புகள், சொந்த இனத்தின் அபிப்ராயத்தை மட்டுமல்ல, இதையும் கடந்து மற்றைய மக்களின் சார்பில் நடத்தியுள்ள கூத்துகள் இனப்பிளவுகளையே அகலமாக்கியுள்ளது.


இந்த நிலையில் எந்த முஸ்லீம் பிரதேசமும், எந்தச் சிங்களப் பிரதேசமும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே இல்லை. இரண்டாவது சுனாமியைப் புலிகளின் போராட்டம் உருவாக்கிவிடவில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மூன்று இனத்தையும் சேர்ந்தவர்கள். அவர்கள் பிரச்சனையை இரண்டு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு, அதை அதற்குள் புகுத்த முனைவது அத்துமீறிய கற்பழிப்புதான். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது தொடர்பாகப் புலிகளுடன் பேசப்படுவது நியாயமானது. மறுபக்கத்தில் புனர்நிர்மாணத்தைப் புலிகள் தமது சொந்த வளத்தில் (பணத்தில்) செய்திருக்க வேண்டும் என்பது மற்றொரு விடையம். பல கோடி பணத்தைப் புலம் பெயர் சமூகத்திடம் திரட்டிய போதும் கூட அவை எவையும் மக்களிடம் சென்றடையவில்லை. மறுதளத்தில் அன்னியச் சக்திகளிடமும், அரசிடமும் நிவாரணம் செய்யக் கோருவது நாட்டை அடகுவைப்பதாகும். இதற்கு வேறு விளக்கம் கிடையாது.


முஸ்லீம் தரப்பு பொதுக் கட்டமைப்பைக் கோரவில்லை என்ற வாதம் அர்த்தமற்றது. உண்மையில் பொதுக் கட்டமைப்பைக் கூட புலிகளும்தான் கோரவில்லை. மாறாக ஏகாதிபத்தியம்தான், இடைக்கால நிர்வாகச் சபைக்கு மாற்றீடாக மேல் இருந்து திணித்தது. உண்மையில் சுனாமி நிவாரணத்தை இயல்பாகவே இருக்கக் கூடிய, ஒரு நிர்வாக அலகுக்கு ஊடாகத்தான் நிவாரணம் அளிக்க முனைந்து இருக்க வேண்டும். அதுவே சரியானதும் கூட. இங்கு சிறப்புக் கமிட்டிகள் இயங்குவது என்பது வேறு. ஆனால் ஏகாதிபத்தியம் திட்டமிட்ட சதிகளே, பொதுக்கட்டமைப்பாக வெளிவந்துள்ளது. இது புலிகளின் கண்டுபிடிப்பல்ல. இடைக்கால அரசைக் கோரிய புலிகளுக்கு, பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் ஒரு இடைக்கால ஏற்பாட்டை ஏகாதிபத்தியங்கள் வழங்கியுள்ளன அவ்வளவே. இந்த மனித விரோத ஒப்பந்தம் மூலம், மனித அவலத்தை இப்படி திசை திருப்பி சிதைத்துள்ளது. ஏன் பொதுக்கட்டமைப்புக்காக இரகசிய சதிகளை அடிப்படையாகக் கொண்டு நோர்வேயின் தலைமையில் புலிகளும் அரசும் கூடிக் குலாவிய போது, இந்தப் பொதுக்கட்டமைப்பு தொடர்பாக அரசு முஸ்லீம் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது. இதையே தமிழ்ச் செல்வனும் பச்சையாகச் செய்தவர் தான். ஆனால் விளைவு அப்பட்டமான ஒரு மனித விரோத ஒப்பந்தமாக இது வெளிவந்துள்ளது. அவ்வளவே.


முஸ்லீம் தரப்பு அரசுடனும், எதிர்க்கட்சியுடனும் நிற்கின்றது என்ற புலித்தரப்பு வாதம் கூட அபத்தமானது. பாராளுமன்ற அரசியல் அப்படித்தான் இருக்கும். அன்றும் இன்றும் தமிழர் கட்சிகள் இப்படித்தான் சோரம் போனார்கள். எப்போதும் மக்களுக்கு எதிரான கைக்கூலிகளாகவே செயல்படுபவர்கள்தான். தமிழர் தரப்பு எப்போதும் யூ.என்.பி.யுடன் வைப்பாட்டியாகக் கொஞ்சிக் குலாவித் திரிந்த போது, இப்படித்தான் இருந்தது. ஏன் இன்று புலிகள் ஏகாதிபத்தியத்தின் கால்களில் தவண்டு நக்கித் திரிகின்ற காட்சியும், அப்படித்தான் உள்ளது. அரசியல் கட்சிகள் சிங்கள அரசுடன் கூடிக் குலாவுகின்றன என்பதற்காக, முஸ்லீம் மக்களின் நியாயமான உரிமையை மறுப்பது எப்படி தமிழர்தரப்பு நியாயமாக இருக்க முடியும்? புலித் தரப்பு தர்க்க ரீதியாகக் கூட இதை நியாயப்படுத்த முடியாது. முஸ்லீம் மக்களின் பிரச்சனை தனித்துவமானது. அதை அவர்கள்தான் தீர்க்க வேண்டுமே ஒழிய தமிழராகிய நாமல்ல. ஜனநாயக விரோதமாக அவர்களின் பிரச்சனையில் தலையிடும் உரிமை, தமிழர் தரப்புக்குக் கிடையவே கிடையாது.


இந்தப் பொதுக் கட்டமைப்பை முஸ்லீம் பொதுமக்கள் ஏற்றுக் கொள்வதாகப் புலிகள் தரப்பு கூறி வைக்கும் நியாயம் பச்சை மோசடியாகும். எங்கே? எப்போது? யார்? எப்படி? ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளனர். நாற்றம் எடுக்கும் தமது சொந்த மனிதவிரோதத்தை மூடிமறைக்க, புலிகள், தமது சொந்தக் கற்பனையில் இருந்து இப்படி போடுகின்றனர். தமிழ்ச்செல்வன் இந்த அடிப்படையில்தான் கிழக்குக்கு வந்த போது, முஸ்லீம் பொது அமைப்புகளைச் சந்தித்து தனது அரசியல் மோசடியை அரங்கேற்றினார். அவர்கள் தமிழ்ச் செல்வனை சந்தித்தது தமிழரின் அடாத்தான ஜனநாயக விரோத அதிகாரத்தை ஏற்றல்ல. பிரச்சனையைப் பேசித் தீர்க்கும் ஜனநாயக அணுகுமுறையின் அடிப்படையில் நேர்மையாகவே அணுகினார்கள். புலிகளைப் போல், குறுகிய நோக்கில் அந்தச் சந்திப்புக்கு விளக்கம் எதையும் அவர்கள் கொடுக்கவில்லை. புலி பாசிசம் எப்படி எதையும் திரித்துக் கூறும் வக்கிரம், இதை ஒருநாளும் உண்மையாக்கி விடாது.


முஸ்லீம் கட்சிகள் தான் இதைக் குழப்புகின்றன என்ற புலித்தரப்பு மற்றொரு வாதம் ஒருதலைப்பட்சமானது. புலிகள் தமது சொந்த அரசியல் இலாபத்துக்கு இப்படி புணர்வது என்பது, தமிழர் தரப்பின் விதண்டாவாதமாகும். பொதுவாகவே அரசியல் கட்சிகளின் சுய இலாப அரசியல், அப்பட்டமாக அப்படியே புலிகளிடமே உள்ளது. மக்களைப் பற்றிக் கவலைப்படாத தலைமைகள், தமிழ் முஸ்லீம் வேறுபாடுகள் கடந்த ஒன்றாகவுள்ளது. இது உலகம் தழுவியது கூட. அன்றாடம் மக்களுக்கு எதிராகவே எப்போதும், எந்தக் கணமும் இயங்குகின்றனர். ஆனால் முஸ்லீம் கட்சிகள் இதை எதிர்க்கும்போது, உண்மையில் முஸ்லீம் மக்களுக்கு தமிழ்க் குறுந்தேசியத் தரப்பாலும், சிங்களப் பேரினவாதத் தரப்பாலும் இழைக்கப்பட்ட துரோகத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கப்படுகின்றது. இதை எதிர்க்கத் தவறின், இதன் விளைவு அவர்களையே இல்லாததாக்கி புதிய தலைமைகள் தோன்றுவதை விரைவுபடுத்திவிடும்.


இந்த ஒப்பந்தம் திட்டவட்டமாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக இருப்பதால் தான், தவிர்க்க முடியாது தமது சொந்த சுயஅரசியல் இலாபத்தைத் தாண்டியும் எதிர்க்க வேண்டிய நிலையில் அனைத்து முஸ்லீம் கட்சியையும், தள்ளிவிட்டுள்ளது. அவ்வளவே. இங்கு முஸ்லீம் கட்சிகள் முஸ்லீம் மக்களுக்குச் செய்யும் துரோகத்தை எதிர்ப்பதாக நடித்து, முஸ்லீம் மக்களின் அபிலாசைகளை இனவாத எல்லைக்குள் தமது சொந்த நலனைப் பூர்த்தி செய்ய பயன்படுத்துவதுதான் மாறாக முஸ்லீம் மக்களின் நியாயமான உணர்வுகளை முஸ்லீம் கட்சிகள், குறுந்தேசியத் தமிழர்கள் மற்றும் பேரினவாதிகளும் ஏகாதிபத்தியத்தின் துணையுடன் தூசாக மதித்தே இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளனர். முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஸ்ராப் மேலும் ஒருபடி மேலே போய் புலித்தலைமையுடன் இணக்கமான நிலைப்பாடுகள் மூலம் இதைச் சரிகட்ட முடியும் என்கின்றõர். எதார்த்தத்தின் பெயரில் இப்படி சோரம் போகும் அரசியல், மக்களின் முதுகில் குத்துவதாகும். உண்மையில் நியாயமான கோரிக்கைகளைத் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களிடம் வைக்கத் தயாரற்ற, பேரம் பேசும் சுயநல அரசியலே இங்கு பளிச்சென்று வெளிப்படுகின்றது. இதற்கு வெளியில் புலிகளுடன் பேசுவது என்பது முற்றிலும் வேறானது.


புலிகளின் மற்றொரு கூற்று நகைப்புக்குரிய ஒன்றாக முன்வைக்கப்படுகின்றது. முஸ்லீம் தரப்புடன் பேசுவது என்றால் யாருடன் பேசுவது? அதற்கு என்று ஒரு தலைமை உண்டா? இது வேடிக்கையான பாசிச வாதம்தான். ஒரு தலைமை என்ற ஏகபோக சர்வாதிகாரக் கோட்பாடுதான் இப்படி பாசிசம் சித்தாந்தமாக வெளிப்படுகின்றது. தமிழர் தரப்பை அன்றாடம் சுட்டுக் கொன்றும் கூட, இதுவரை ஒரு தலைமையைப் புலிகளால் நிறுவ முடியவில்லை. இதை நிறுவவும் முடியாது. இதை முஸ்லீம் மக்களிடம் கோருவதன் அர்த்தம்தான் என்ன? உண்மையில் முஸ்லீம் மக்களுடன் பேசவே முடியாது என்ற அடாத்தான பேரினவாத நடைமுறையையே இது மீண்டும் பிரதிபலிக்கின்றது. தங்களைப் போல் ஒரு குழு என்றால், அது புலிக்கு எதிரான மற்றொரு அல்கொய்தாவாகவே இருக்கும். யாருடன் பேசுவது என்று புலிப்பாணியில் நோர்வே பிரதிநிதி சத்தியெடுத்த போது, ஆகா என்ன யுகப்புரட்சி என்று புலிகள் குதூகலம் கொண்டிருக்கலாம். ஆனால் அதன் மூலம் முஸ்லீம் மக்களின் எதிர்ப்பை இல்லாதொழிக்க முடியவில்லை.


முதலில் முஸ்லீம் மக்களுடன் பேசுவதற்கே தயாரற்ற புலிகள், அவர்களின் உரிமைப் பிரச்சினையை மறுதலிக்கும் புலிகளின் ஜனநாயக விரோதப் போக்குதான் பிரச்சனைக்கான அடிப்படையாகும். பேச விருப்பம் இருந்தால், அனைவருடனும் மனம்விட்டு நேர்மையாகப் பேச முடியும் என்பது ஒரு ஜனநாயகப் பண்பாகும். யாருடன் பேசுவது என்று குதர்க்கம் பண்ணுவதன் மூலம், முஸ்லீம் மக்கள் மேல் அதிகாரத்தைச் செலுத்துவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?


புலிதரப்பு பினாமிகளால் தமது ஜனநாயக விரோதப் போக்கை நியாயப்படுத்த வைக்கப்பட்ட மற்றொரு வாதத்தில், இந்த பொதுக்கட்டமைப்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்குவதால் புலிகள் தான் இதில் கையெழுத்திட முடியும் என்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் பொதுக்கட்டமைப்பையே திரித்துக் காட்டுவதன் மூலம், முஸ்லீம் மக்களின் முதுகில் குத்தியதை மூடிமறைக்க முயல்வதாகும்.


இக்கட்டமைப்பு வடக்கு கிழக்கில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இயங்குகின்றது. இது அரசு கட்டுப்பாட்டு மற்றும் புலிக்கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்று வேறுபாடற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் புலிகளினது கட்டுப்பாட்டுப் பிரதேசம் எங்கிலும், முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் எந்தப் பிரதேசமும் கிடையாது. அதேபோல் தான் சிங்கள மக்களையும் கொண்டிருக்கவில்லை. அந்தளவுக்குப் புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கும், குறுந்தேசிய வக்கிரமும் அதை அனுமதிக்கவில்லை. மறுபக்கத்தில் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பொதுக்கட்டமைப்பு ஊடாகப் புலிகள் பெற்றுள்ளனர். இது அந்த மக்களின் விருப்பு வெறுப்புகளைக் கவனத்தில் எடுக்காது, அவர்களின் மேல் ஏகாதிபத்தியம் திணித்த ஒரு ஒப்பந்தமே இது.


காலங்காலமாகப் புலிகளின் நடத்தைகளைத் தெரிந்து கொண்டவர்களுக்கு, புலிகள் பொதுக்கட்டமைப்பின் பெயரில் என்ன செய்வார்கள் என்பது சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த ஒப்பந்தம் இனங்களுக்கு இடையிலான பிளவை அதிகரிக்க வைத்த அதேநேரம், சுனாமி ஏற்படுத்திய ஐக்கியத்தையும் சிதைத்துள்ளது. ஒப்பந்தத்தை விடவும், ஒப்பந்த உள்ளடக்கமே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.


புலிதரப்பின் மற்றொரு வாதம், தமிழ் மக்கள் போராடிப் பெற்றதில் முஸ்லீம்கள் மீன்பிடிக்க முடியாது என்பதாகும். இந்த வாதமே அபத்தமானது. முஸ்லீம் மக்கள் அப்படி எதையும், எங்கும் இன்றுவரை கோரவில்லை. மாறாகப் புலிகள் தான் முஸ்லீம் மக்களின் பெயரில், அவர்கள் மேல் பலாத்காரமாக மீன்பிடிக்கின்றனர். அரசியல் சமூகக் கூறுகளில் முஸ்லீம் மக்கள் மத்தியில் எந்த வேர்களும் அற்ற புலிகள், அவர்கள் மேல் நடத்தும் ஆக்கிரமிப்புக்களுக்கும் சூறையாடல்களுக்கும் எதிராகவே அவர்கள் போராடுகின்றனர். பேச்சு வார்த்தையில் ஒரு தரப்பாக தாங்கள் பங்கு பற்ற வேண்டும் என்ற கோரிக்கை, அடிப்படையில், புலிகள் அவர்கள் சார்பாகப் பேச முற்படுவதற்கு எதிராகவும், தம் மீதான புலிகளின் தொடர் ஒடுக்குமுறைகளின் எதிர்வினையும் தான் அப்படி வெளிப்படுகின்றது. இதைத் தமிழர் பிரச்சனையில் முஸ்லீம்கள் குளிர்காய நினைப்பதாகப் பினாற்றும் புலிப்பினாமியத்தின் ஜனநாயக மறுப்பு மனிதவிரோதத் தன்மை கொண்டவை. இப்படி மறுக்கும் பாசிச வக்கிரம், முஸ்லீம் மக்களைக் கொடூரமாகவே ஒடுக்கும் உரிமையைத் தம்மிடம் தரும்படி கோருவதாகவே உள்ளது.


மற்றொரு புலி வாதம் முஸ்லீம் மக்கள் காட்டிக் கொடுத்தனர் என்பதாலும், தமிழ் மக்கள் மீது பல தாக்குதல்களை நடத்தியவர்கள் என்பதாலும், பொதுக் கட்டமைப்பு பற்றி அவர்கள் பேச முடியாது என்கின்றனர். நல்லதொரு பாசிச வேடிக்கை. நீங்கள் செய்யாத எதையும், அவர்கள் தரப்பில் ஒரு சிலர் செய்யவில்லை. நீங்கள் செய்ததையே ஒரு சிலர் மாற்றீடாகவே செய்துள்ளனர். பழிக்குப்பழி என்ற அடிப்படையில் உங்களின் நடவடிக்கைகளின் எதிர்வினையாகவே அவை அமைந்து இருந்தன. முஸ்லீம் கிராமங்களைச் சூறையாடுவது முதல், அவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று போட்ட நிகழ்வுகள் வரை அவர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தியவர்கள், அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள், அவர்களிடம் கப்பம் வசூலிப்பவர்கள் எல்லாம் யார்? தமிழராகிய நாம் தான். இந்த நிலையில் இதன் எதிர்வினையாக சில உதிரிச் சம்பவங்கள் வெளிப்பட்டது உண்டு. இதைப் பேரினவாத அரசு பயன்படுத்தியதும் உண்டு. இதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாதுதான். ஆனால் இதைக் குற்றமாகக் காட்ட முனைவதே சுத்த அபத்தம். இதைக் குற்றம் சாட்டும் முன்பு முஸ்லீம் மக்கள் மேல் நடத்தும் தொடர் அடக்குமுறையைக் கண்டிக்கவும், அதைக் களையவும் தார்மீகப் பலம் எமக்கு வேண்டும்.


இயக்கங்கள் ஆயுதம் ஏந்தும் முன்பு தமிழ் முஸ்லீம் மக்களின் ஐக்கியம், ஊர்களில் எப்போதும் மிகவும் நெருக்கமானதாகவே இருந்தன. இதைக் குலைத்தவர்கள் ஆயுதம் ஏந்திய அராஜகக் குழுக்கள் தான். சுனாமி ஏற்படுத்திய ஐக்கியத்தைக் குலைப்பது, முஸ்லீம் மக்கள் மேல் அதிகாரத்தைச் செலுத்தும் தமிழர் சார்பு பொதுக்கட்டமைப்பு தான். இன்று பொதுக் கட்டமைப்பு, ஏற்படுத்த போக்கும் எதிர்விளைவுகள் மிக அகண்டதாகவே இருக்கும். அதைப் பின்னால் பார்ப்போம்.


புலிகளின் மற்றொரு வாதம், முஸ்லீம்கள் வெறுமனே மதச் சிறுபான்மையினரே. அப்படியாயின் புலிகளின் தலைவர் பிரபாகரன் முஸ்லீம் காங்கிரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தான் என்ன? அது மத ஒப்பந்தமா? தமது சொந்தத் தலைவரையே திரிக்க முனையும் முஸ்லீம் விரோத உணர்வுகள்! செல்வநாயகம், அமிர்தலிங்கம் என அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் திருகோணமலை மாநாடு முதல் வட்டுக்கோட்டை தீர்மானம் வரை எங்கிலும் முஸ்லீம் மக்களை மதச் சிறுபான்மையினர் எனக் குறிப்பிடவில்லை. அவர்களைச் சிறுபான்மை தேசிய இனமாகவே ஒத்துக் கொண்டவர்கள். 1915இல் முஸ்லீம் மக்களுக்கு எதிராக சிங்கள இனக் காடையர்கள் நடத்திய இனக்கலவரத்தின் போது கூட, தமிழ்த் தலைமைகள் முஸ்லீம் மக்களைச் சிறுபான்மை இனமாகக் கருதி முஸ்லிம்களுக்கு எதிராகச் சிங்கள இனவெறியர்களுடன் கூடிநின்றனரே ஒழிய சிறுபான்மை மதம் என்ற அடிப்படையில் அல்ல. ஏன் காலனித்துவவாதிகள் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கையாண்ட பல தொடர் நடவடிக்கைகளின் போதும் கூட, அந்த நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக இருக்கவில்லை. ஏனெனின் தமிழ் மக்களை அவர்கள் முஸ்லீமாகக் கருதவில்லை. காலங்காலமாக முஸ்லீம் மக்களின் தனித்தன்மை, இயல்பாகவே பெரும்பான்மை பிரிவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இன்று வசதிக்கு ஏற்ப திரித்துப் புரட்டுவது சுத்த அபத்தம்.


முஸ்லீம் மக்கள் எங்கே போராடியுள்ளனர் என்று புலிகள் கேட்கின்றனர். போராடாமல் உரிமையைக் கோர முடியாது என்கின்ற புலிவாதமே நகைப்புக்குரியது. புலிதரப்பு போராட்டம் என்று கருதும் வரையறைதான் என்ன? குண்டுகள் எறிவது, துப்பாக்கியால் சுடுவது, மாற்றுக் கருத்துள்ளவர்களைச் சுட்டு அழிப்பது, இதைவிட்டால் எதையும் போராட்டமாகப் புலிகள் அங்கீகரித்தது கிடையாது. இதற்கு வெளியில் புலிகள் நடத்தும் சில நடவடிக்கைகளைக் கூட போராட்டமாகக் கருதுவதில்லை. இதனால் தான் முஸ்லீம் மக்களின் அன்றாட போராட்டத்தைக் கூட மறுக்கின்றனர். இதைப் புலிப் பினாமியும், தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.யும், அரசியல் ரவுடியுமான ரவிராஜ்சை விட வேறு யாரும் அழகாகக் கூறமுடியாது. அவர் யுத்த நிறுத்தம் தொடங்கிய காலத்தில் தனது கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்த ""புலிகள் இன்னமும் ஆயுதம் தாங்கியிருக்கும் ஒரு ஆயுதக் குழு... இப்போதுதான் அவர்கள் ஜனநாயக வழிக்கு வரமுயன்று கொண்டிருக்கிறார்கள்...'' என்றார். இந்த ஜனநாயக வழிக்கும் அவர்கள் எப்படி வரவில்லையோ, அப்படியே மற்றைய போராட்டங்களைக் கூட ஏற்றுக் கொண்டதும் கிடையாது. இப்படி உள்ளவர்களின் கண்ணோட்டமே, முஸ்லீம் மக்கள் போராடவில்லை என்று கூறுகின்றது. அவர்களைப் போல் இயங்கவில்லை என்பதையே இது குறிக்கின்றது. இந்த அராஜக வழி மக்களுக்கான போராட்டமல்ல. புலிகள் போராட்டமாகக் கருதுவதுபோல், இன்னுமொரு அல்கொய்தா இயக்கம் புலிகளுக்குச் சமாந்தரமாக இலங்கையில் தேவையற்றது. ஆனால் அதை உருவாக்கியே தீருவோம் என்று புலிகள் தமது சொந்த பாசிசம் மூலம் கங்கணம் கட்டி நிற்பது வேறு.


புலிகள் அவதூறாகத் தூற்றுவது போல், முஸ்லீம்கள் போராடவில்லை என்பது தவறு. புலிகளில் பல முஸ்லீம் இளைஞர்கள் இணைந்து போராடியவர்கள் மட்டுமின்றி, உங்கள் மாவீரர் பட்டியலிலும் அவர்கள் பெயர்கள் கூட உள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லீம் மக்கள் மேல் நீங்கள் தாக்குதலைத் தொடங்கும் முன்பு, உங்கள் அமைப்பில் இணைந்து இருந்த சகல முஸ்லீம் போராளிகளையும் கொன்ற தேசிய மனநோயை எப்படிப் புரிந்து கொள்வது? முஸ்லீம் மக்களுக்கு எதிரான தமிழ் சிங்கள தரப்பின் தொடர் படுகொலை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களின் போராட்டம், தொடர்ச்சியான அவர்களின் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது. இன்று பொதுக்கட்டமைப்புக்கு எதிரான அவர்களின் போராட்டம் கூட, அவர்களின் தனித்துவமான ஜனநாயகத்துக்கான போராட்டம் தான். நான் முன்பு எழுதிய கட்டுரைகள் இதை விரிவாக மேலும் ஆராய்கின்றது.


1. முஸ்லீம் மக்கள் மீதான வன்முறையும், அதற்கு எதிரான போராட்டமும்


2. முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறையின் அடிப்படை வரியாகும்.


3. முஸ்லீம் காங்கிரசுக்குள் நடந்த அதிகாரப் போட்டி


சுனாமியின் பெயரில் உருவான பொதுக் கட்டமைப்பின் உள்ளடக்க விதிகள் மனித இனத்துக்கு எதிராகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முஸ்லீம் மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்குக் கூட எதிரானதுதான். மறுபக்கத்தில் சிங்கள இனவெறிக் கூட்டம், தமிழ் மக்களுக்கு எதிராகவே கூக்குரலிடுகின்றது. எங்கும் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்ட வக்கிரமே அரங்கேறுகின்றது. ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் பேரினவாத அரசும், குறுந்தேசியப் புலிகளும் இணைந்து உருவாக்கிய இந்தப் பொதுக்கட்டமைப்பு, ஒட்டுமொத்த மனித இனத்துக்கு எதிராகவே உள்ளது. இது பேரினவாத எதிர்ப்பில் இருந்து அடிப்படையில் வேறுபட்டது.


1. பாதிக்கப்பட்ட மக்களினதும், அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களினதும் பங்களிப்புகள் எதுவுமின்றி இவை மேல் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களின் மேல் பலாத்காரமாகவே திணிக்கப்படுகின்றது.


2. இது ஏகாதிபத்தியத் தேவையைப் பூர்த்தி செய்யும் அரசியல் பொருளாதார உள்ளடக்கத்தில், அன்னிய நிதியில் அன்னியரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.


3. சுனாமியால் அதிகளவில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.


4. சுனாமி ஏற்படுத்திய இன ஐக்கியத்தைச் சிதைத்து, இனக்குரோதத்தை ஆழமாக்கும் வகையில், ஜனநாயக மரபுகளைக் காலில் போட்டு மிதித்தே உருவாக்கப்பட்டுள்ளது.


5. இது ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவம் என்ற உயிரோட்டமான சமூக உள்ளடக்கத்தை நிராகரித்து, சர்வாதிகாரக் கட்டமைப்பை மேல் இருந்து சமூகம் மீது திணிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் வாய்ப் பேசாது, கைகட்டி நிற்க கோருகின்றது. இதையே ஏகாதிபத்தியம் விரும்பும் வகையில், தனது சொந்த மத்தியஸ்தம் ஊடாக உருவாக்கியுள்ளது.


6. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனையை வில்லங்கமாகவே தேசிய இனப்பிரச்சனைக்குள் புகுத்தியதன் மூலம், பாதிக்கப்பட்ட மக்களின் மேல் இன வக்கிரங்களைப் புகுத்தியுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களை எதிரெதிராக நிறுத்தியுள்ளது. சுனாமி ஏற்படுத்திய ஐக்கியத்தை யார் விரும்பவில்லையோ, அவர்களின் விருப்பத்தை இந்த ஒப்பந்தம் பூர்த்தி செய்துள்ளது.


இதே நேரம் இந்தப் பொதுக் கட்டமைப்பு மூலம் அதிக இலாபத்தைப் பெறப் போவது யார்? நிச்சயமாக மக்கள் அல்ல.


1. ஏகாதிபத்தியம் இலங்கையை அடிமைப்படுத்தும் போக்கில், இலங்கையின் மறுகாலனியாக்கத்தை உறுதி செய்துள்ளது.


2. பேரினவாதச் சிங்கள அரசு பிரித்தாளும் தந்திரத்துக்கு ஏற்ப, இனமோதலைச் சிறுபான்மை இனங்களுக்கு இடையில் தள்ளிவிட்டுள்ளது. இந்தத் தெரிவைப் புலிகளின் மக்கள் விரோதத் தன்மை மீது, திட்டமிட்ட வகையில் புலிகளின் குறுந்தேசிய நடைமுறையைப் பயன்படுத்தியுள்ளது.


3. புலிகள் ஒருதலைப்பட்சமாக முஸ்லீம் மக்களின் பாதிப்பை அதிகபட்சம் சுரண்டும் ஒரு நிலையைக் கொண்டு, இது தன்னகத்தே சிறுபான்மை இனங்கள் மேலான இன வெறுப்பை ஆழமாக்கியுள்ளது.


4. புலிகள் இந்தச் சுனாமி மூலம் சுனாமி நிதியையும், எதிர்கால வளங்களையும் சூறையாடி மிகப் பெரிய நிதியாதாரங்களைக் கைப்பற்றுவதே இந்த ஒப்பந்தத்தின் சாரமாகும்.


5. இந்த ஒப்பந்தம் கிழக்கில் மற்றொரு அரசியல் பிளவை மேலும் ஆழமாக்கியுள்ளது. கருணா தரப்பு ஏற்படுத்திய பிளவு போல், இதுவும் மற்றொரு ஆழமான பிளவுதான்.


6. பொதுக்கட்டமைப்பு கருணா தரப்பினுடைய தாக்குதலின் அளவையும், செல்வாக்கையும் அதிகரிக்க வைக்கும். கருணா தனது இருப்புக்கான போராட்டத்தைக் கூர்மையாக்கவே இது மறைமுகமாக அறைகூவுகின்றது. அத்துடன் புலிகளின் மனித விரோத நடவடிக்கைகள், இதற்கு உதவும் வகையில் அமையும். கிழக்கிற்கு இயல்பாகவே ஏற்படும் புறக்கணிப்பு, இதை நிச்சயமாக உருவாக்கியே தீரும். இந்த வகையில் பிராந்திய தலைமையகங்கள் கிளிநொச்சியில் அமைந்து இருப்பது இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு.


7. முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, புலிக்கு எதிரான உணர்வாக மேலும் வலுப்பெறுகின்றது. இதைக் கருணா தரப்பு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது. இதையே ஜே.வி.பி.யும் கூட பயன்படுத்தும். கருணா தரப்பு முஸ்லீம் மக்கள் மத்தியில் புலிக்கு எதிரான ஆயுதம் ஏந்திய குழுக்களை உருவாக்கும் நிலைமைகள், தவிர்க்க முடியாத நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது. அத்துடன் அல்கொய்தா போன்ற இயக்கங்களின் வரவிற்குக் கூட இது வழிவகுக்கும்.


இப்படி பொதுக் கட்டமைப்பு தன்னை அலங்காரப்படுத்தி அலங்கோலமாக வெளிவந்துள்ளது. இதில் முஸ்லீம் மக்களின் மேல் சவாரிவிடும் ஒரு பேரினவாதக் கூட்டுக்கே புலிகளும் விரும்பி இணங்கிப் போயுள்ளனர். இதையே 1915ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிரான இனக்கலவரத்தின் போது எதைத் தமிழ்த் தலைவர்கள் செய்தனரோ அதுவே இன்று மீணடும் அரங்கேறியுள்ளது. அன்று 86 முஸ்லீம் வழிபாட்டுத் தலங்கள் சேதமாகின. 4075 முஸ்லீம் கடைகள் சூறையாடப்பட்டன அல்லது எரியூட்டப்பட்டன. 35 முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 198 பேர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். 4 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். 17 கத்தோலிக்கத் தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குரல்கொடுக்க வேண்டிய தமிழ்த் தலைமை, சிங்கள இனவாதிகளுடன் கூடி நின்றது. சேர் பொன் இராமநாதன் சிங்கள இனவாதிகளுக்காக லண்டனில் வழக்காடி முஸ்லீம் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு எதிராக இருந்தார். அதே வரலாற்று தொடர்ச்சியே மீண்டும் இன்று பொதுக்கட்டமைப்பின் ஊடாக அரங்கேறியுள்ளது.


உண்மையில் சுனாமி பாதிப்பை இதைவிட இலகுவான வழிகளில் தீர்த்து இருக்க முடியும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிவாரணத்தை அந்தந்த அரசாங்க அதிபர் ஊடாக இலகுவாக செய்து இருக்க முடியும் அல்லது அந்தந்த இனங்களின் தலைவர்களைக் கொண்டு இலகுவாகவே இதை நிவர்த்தி செய்திருக்க முடியும்.


உண்மையில் இதை நிராகரித்த அரசு, தமிழ் மக்களுக்கு எதிராகப் பேரினவாதிகள் எப்படி பேரினவாதத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களைத் திட்டமிட்டு ஒடுக்கினரோ, அதையே முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் தமிழ்த் தரப்பைச் செய்யக் கோரும் வகையில் திட்டமிட்ட நகர்வு ஒன்றை ஏகாதிபத்திய ஆலோசனையுடன் செய்துள்ளனர். முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டப் புலிகளின் தொடர் வன்முறைகள் ஒடுக்குமுறைகள் தொடரும் ஒரு நிலையில் முஸ்லீம் மக்கள் மேலான அதிகாரத்தைச் செலுத்தும் வகையில் பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் மக்களை இழிவுபடுத்தக் கூடிய வகையில் இதன் உள்ளடக்கம் மிக மோசமானதாகவே உள்ளது.


10 பேர் கொண்ட உறுப்பினரில் மூன்று பேர் மட்டுமே முஸ்லீம்கள் புலிகளின் உறுப்பினர்கள் 5 பேர். இதில் என்ன வேடிக்கை என்றால், புலிகளின் சார்பான 5 உறுப்பினர்களின் முடிவுகளை மாற்றம் செய்ய முடியாத ஒரு பெரும்பான்மையைத் தக்கவைத்துள்ளது. இதை மாற்ற முடியாது. இங்கு பேச்சு வார்த்தையின் பின்னால், மூன்று முஸ்லீம் தரப்பு உறுப்பினர்களைப் புலிகள் விட்டுக் கொடுக்கவில்லை. மாறாக அரசுதான் தனது தரப்பில் இருந்து விட்டுக் கொடுத்துள்ளது. இதுவே இதில் முக்கியமான ஒரு மனிதவிரோத உள்ளடக்கமாகும்.


இரண்டாவது இந்தப் பிராந்தியக் கமிட்டிகள் செயல்படும் இடம் கிளிநொச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது புலிகளின் நிபந்தனையும் கூட. இது தமது சர்வாதிகார உருட்டல் மிரட்டலுக்கும், கவனிப்புக்கும் உள்ளடக்கக் கூடிய ஒரு திட்டமிட்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்திய கமிட்டிகள் குறித்த பிரதேசத்தில் அமைவதைக் கூட புலிகள் மறுத்து நின்ற, ஒரு மனிதவிரோதத் தன்மையையே இது எடுத்துக் காட்டுகின்றது.


மூன்றாவது தலைமைக் கமிட்டி வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட போதும், அதன் செயல்பாடு என்பது திட்டவட்டமாகவே புலிகளின் நிர்பந்தத்துக்கு உட்பட்டதே. வீட்டோ அதிகாரம் 14 நாட்களில் தீர்க்கப்படாதவிடத்து, இந்தப் பொதுக்கட்டமைப்பே செயல் இழந்துவிடும். இது 14 நாள் அவகாசம் புலிக்குச் சார்பானதே. உதாரணமாக தமது உறுப்பினரின் பாதுகாப்பு விடையத்தில் எப்படி புலிகள் 14 நாள் கொடுத்துள்ளனரோ, அதேபோன்றதே இதுவும். 14 நாள் அவகாசத்தில் முஸ்லீம் தரப்பு இணங்கா விட்டால், இதைக் குழப்பிய குற்றத்துக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழலை உருவாக்கி, அவதூறு பூசுவதற்கான ஒரு நிர்பந்தத்தைக் கொடுத்து அனைத்தையும் புலிசார்பாகச் சரிக்கட்ட முடியும். இதையே பொதுக்கட்டமைப்பின் உள்ளடக்கம் காட்டுகின்றது.


உண்மையில் முஸ்லீம் மக்களுக்குத் தமிழர் தரப்பால் இழைக்கப்பட்டுள்ள அவமானம், மீண்டும் மீண்டும் வரலாற்றில் தொடருகின்றது. இந்த உண்மையைத் தமிழராகிய நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டிய தமிழ்த் தரப்பின் கடமையாக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் முதுகுகளில் சவாரி செய்ய தமிழர்கள் ஆசைப்படுவதே வெட்கக் கேடானது.


இலங்கை மக்களின் சுபீட்சத்துக்கு எப்படி மலையக மக்கள் தமது முதுகை வளைத்து உழைத்துத் தம்மைப் பலியிட்டார்களோ, அதே நிலையை ஒத்தது இது. தமிழ் மக்களின் சுபீட்சம் முஸ்லீம் மக்களின் சிதைவில் இருந்துதான் என்பது, எம் கண்முன்னான சமகாலக் காட்சியாகவே விரிந்து கிடக்கின்றது. இந்த ஜனநாயக விரோதத்தை யாரும் அங்கீகரிக்கவும், அதற்கு இணங்கிப் போகவும் முடியாது. இந்த மனித விரோதக் கொடூரத்தை, பேரினவாதத்தின் வக்கிரங்களுக்குள் மூடி மறைத்துவிடவும் முடியாது. முஸ்லீம் மக்கள் மேல் சூறையாடும் அதிகாரத்தை, தமிழராகிய எமக்கும் அவர்கள் தந்துவிடவில்லை. இந்த உண்மையை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால், தமிழராகிய நாம் இழைக்கும் கொடூரக் குற்றத்தை, நாம் எமது இனத்தின் சார்பாக உணர்ந்து கொள்ள முடியும். இந்தக் குற்றத்துக்கு நாம் ஆளாகாது இருக்கவும், முஸ்லீம் மக்களுக்காகக் குரல் கொடுத்து போராடவும் முடியும்.

 

2.07.2005