book _1.jpg"கொடுமையின் சுமை அழுத்தும்போது மனிதன் ஊமையாகி விடுகின்றான்.'' மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிஸ்ட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசிச வழிமுறைகளில் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டுகின்றனர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதைச் செங்கம்பளமாக்கி அதன் மேல் தான் எப்போதும் வீரநடை போடுகின்றனர். இது குறித்து கார்ல் மார்க்ஸ் "கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்'' என்கிறார்.

 

சதி, சூழ்ச்சி, நேர்மையீனம், வக்கிரம், அராஜகம், சூறையாடல், தரகுத்தனம், வன்முறை என ஒட்டு மொத்தமும் ஒருங்கிணைந்து இலங்கை அரசியலில் குடிகொண்டுள்ளது. அடிப்படையான நேர்மை, மக்கள் பற்றிய அக்கறை, விமர்சனம், சுயவிமர்சனம் என எதையும் எமது மண்ணில் இனம் காண முடியாத ஒரு வறண்ட சூனியத்தில், விதைக்கப்படும் விதைகள் தான் இக்கட்டுரைகள். இந்த நிலையில் மனித இனம் சந்திக்கும் மனித அவலங்களை உள்ளடக்கிய வகையில், பல தலைப்புகளைக் கொண்டதே இந்த நூல். சமகால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொகுப்பே இந்த நூல். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலானவை, மரணதண்டனைக்கு உரியவையாகவே உள்ளது. மரணத்தை எதிர்கொள்ளும் ஒரு தயார்நிலையில் தான், இந்தக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. இவை தீதீதீ.tச்ட்டிடூஞிடிணூஞிடூஞு.Nஞுtt என்ற எமது இணையத்தளத்தில் உடனுக்குடன் பிரசுரிக்கப்பட்டு வந்தன.


இந்தநூல் இலங்கை முதல் சர்வதேச நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. இருந்தபோதும் இந்த நூல் இலங்கையை மையமாகக் கொண்டே உள்ளது. சுனாமி, இலங்கையில் தொடரும் படுகொலைகள், சில மரணங்கள், புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள், இழுபறியான மக்கள் விரோதப் பேரங்கள் முதல் ஏகாதிபத்தியங்களின் சதிராட்டங்கள் வரை பலவற்றை இத்தொகுப்பு நூல் கொண்டுள்ளது.


உலகளவில் மனித இனம் சந்திக்கும் தொடர் அவலங்களின் ஒரு பகுதியாக இலங்கை மக்கள் அனுபவிக்கும் அவலங்களையிட்டு யாரும் வாய்திறப்பதில்லை. இது எமது சொந்தத் தலைவிதியாக உள்ளது. பினாமியமும், வாய் திறவாது சூழலுக்கு இசைந்து போகும் மௌனங்களும், மக்களின் அனைத்துவிதமான வாழ்வியல் சமூக ஆதாரங்களையும் அழித்து வருகின்றது. மறுபுறம் மிகக் கடும் எதிர்தரப்பாக மாறி நிற்போர் கூட, மக்களைச் சார்ந்து நிற்பதில்லை. மாறாக ஒரு கைக்கூலிக் கும்பலாகவே சீரழிந்து, அன்றாடம் சிதைந்து வருகின்றனர். ஏகாதிபத்தியத்தின் தலையீட்டையும், மறுகாலனியாதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத்தரப்பும் ஏதோ ஒரு வகையில் தமக்குள் முரண்படுகின்றனர். இந்த முரண்பாடு பல படுகொலைகளைக் கூட நடத்தி முடிக்கின்றது. அவை அனைத்தும் மக்களின் நலன் என எதையும் முன்வைப்பதில்லை.


தமது கருத்துக்கள், உரைகள், திட்டங்கள், பேச்சு வார்த்தைகள், நிகழ்ச்சிகள், நடைமுறைகள் என்று அனைத்து விதமான நிகழ்வுகளிலும், மக்களின் சமூகப் பொருளõதார வாழ்வியல் உள்ளடக்கத்தைப் பேச மறுத்து நிற்கின்றனர். மக்களுக்கு எதிராகவே அனைத்தையும் திட்டமிடுகின்றனர். இந்த நிலையில் மக்கள் விரோதக் கும்பலின் அனைத்து விதமான பிரிவுகளையும் போக்குகளையும் இந்த நூல் அம்பலப்படுத்த முனைகின்றது. மக்களின் நலன் என்பது, என்ன என்பதை எடுத்துக் காட்ட முனைகின்றது. ஒரு புரட்சிகரமான விமர்சன அணுகுமுறை எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதை, இந்த நூல் புரட்சிகர உணர்வுடன் கற்றுத் தரமுனைகின்றது.


தோழமையுடன்
பி. இரயாகரன்