book _4.jpgகடந்த 50 வருடங்களாக யூ.என.;பி. மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிகளுக்கு இடையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டம், இனவாத அரசியலாகவே எப்போதும் நடைபெற்றது. தமக்கு இடையில் உள்ள அரசியல் வேறுபாடுகளை எப்போதும், சிறுபான்மை மக்களை ஒடுக்குவதன் மூலம் வெளிப்படுத்தினர். ஒன்றை மாறி ஒன்று தொடர்ச்சியாக, அதி தீவிரமான சிங்கள இனவாத தேசியத்தைக் கட்டமைத்து, சிறுபான்மை இனங்களை ஒடுக்கவே ஆட்சிக்கு வந்தன. இதன் தொடர்ச்சியில் சந்திரிகா - ரணில் என்ற இரண்டு அதிகார மையங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியுள்ளது.


 மக்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்காக தாம் கடினமாக உழைப்பதாகவும் கூறிக் கொண்டு, அதை எதிர்த்தரப்பு செய்யவில்லை என்று தூற்றிக் கொண்டு அதிகாரக் கழுத்தறுப்புகளை நடத்துகின்றனர். இதில் சந்திரிகா அம்மையார் ஒரு படி மேலே போய், அவர்கள் நியாயப்படுத்தும் ஜனநாயகத்தைக் கேலி செய்யும் வகையில், ஒரு சர்வாதிகாரியாகச் செயல்பட்டார். ஜனநாயகத்தின் பெயரில் சட்டங்களை அவர்களே உருவாக்கி, அதைக் கொண்டு ஜனநாயகத்தையே ஒடுக்கும் வரலாற்றில் மற்றொரு எடுத்துக்காட்டாக இச் சம்பவம் அமைந்தது. சந்திரிக்கா அதிகாரங்களைக் கைப்பற்றி தனது கையில் குவித்துவிடுவதன் மூலம், மக்களுக்கு அளப்பரிய சேவை செய்ய உள்ளதாகக் கூறிக் களம் இறங்கி உள்ளார்.


 ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாக வாலாட்டி குலைக்கும் இந்த இரு கும்பலும், ஏகாதிபத்தியம் வீசும் எலும்புகளைச் சுவைக்க நடத்திய அதிரடி ஆட்சி கவிழ்ப்புகளே இவை. இந்த நாய்களுக்கு இடையிலான சண்டையில், வழமை போல் தேசிய இனச் சிக்கலைத் தீர்க்க முன்வைத்த சமாதானம் - அமைதி என்ற பந்தையே விளையாட்டுப் பொருளாக்கியுள்ளனர். இதனடிப்படையில் தலையிட்ட ஏகாதிபத்தியங்கள், மேலும் ஆழமாக இலங்கை மறுகாலனியாதிக்கத்துக்கு உட்படுத்துகின்றது.


 அமைதி சமாதானத்தை அடுத்து, கொள்ளையடிப்போர் களமிறங்க, இலங்கையின் பங்குச் சந்தை 80 சதவீதத்தால் உயர்ந்தது. 1300 வெளிநாட்டுக் கொம்பனிகள் இலங்கையோடு வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்தது. 2003-இல் வெளிநாட்டுக் கொம்பனிகளின் நேரடி முதலீடு 500 மில்லியன் டாலராகியது. இதைப் பெருமையாகப் பீற்றிய இலங்கை மத்திய வங்கி இயக்குனர் அமரானந்த ஜெயவார்டனா, ~~இலங்கையைப் போன்று சுதந்திர வர்த்தகத்திற்குச் சாதகமான சொர்க்கம் உலகில் வேறெங்கும் இல்லை||யென்றான். 1998 இலங்கை இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கையின் பொருளாதாரம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் வீங்கப் போவதாக மார்பு தட்டினர். 2003 இறுதி எட்டு மாதங்களிலும் இலங்கைக்கு வந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 3,01,998 என்று கூறும் இவர்கள், அவர்கள் தலா ஒரு நாளைக்கு இலங்கையில் ஏறத்தாழ 100 டாலர் செலவு செய்து வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித் தருவதாக மார்புதட்டினர். சென்னையிலே தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பூரண ஆசீர்வாதத்தோடு, இலங்கை ஏற்றுமதியாளர் ஆலோசனை நிறுவனம் ஏற்படுத்தப் பட்டுள்ளதென்றும் அரசாங்கம் தனது விபச்சாரத் தரகைப் பட்டியலிட்டு பெருமையாக அடுக்கிவைத்து.


 இப்படி நாட்டைக் கொள்ளையடித்து கூறுபோட்டு விற்கும் நிலையில் தான், சந்திரிக்க ஜே.வி.பி ஆட்சிக் கவிழ்ப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. ஒப்பந்தத்தை அடுத்த நாள் 8000 கோடி ரூபாவால் இலங்கைப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டு மூலதனங்கள் பங்குச் சந்தையில் நடத்திய சூதாட்டம் கடுமையான நெருக்கடிக்குள்ளாகியது. இலங்கை வர்த்தகம் உடனடியாகவே 930 கோடி ரூபாவை இழந்தது. வெளிநாட்டு மூலதனம் கடுமையான நெருக்கடிக்கு கோபத்துக்கு முள்ளாகியது. உடனடியாக வளர்ப்பு நாய்களுக்கு எலும்புகளை உணவாக வீச முடியாது (கடன் மற்றும் உதவியை நிறுத்திவிடுவோம்) என்று மிரட்டி  சமாதானம் அமைதியின் பெயரில் கிடைக்கு சொந்த நலன்களை அடைய ஏகாதிபத்தியங்கள் கடுமையான நிர்பந்தத்தையும் கொடுக்கின்றன. வாலாட்டிய படி குரைப்பதைக் குறைத்துக் கொண்டு, எலும்புகளைப் பகிர்ந்துண்ணுமாறு மிரட்டலுடன் கூடிய பாசத்துடன் கோருகின்றனர். தமிழ் மக்களுக்குத் தீர்வு என்ற பெயரில், ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு உட்பட்ட ஒரு தீர்வை வழங்க நிர்பந்திக்கின்றனர். இதை நோக்கிய எல்லாத் தரப்பு நிர்பந்தமும், இலங்கையை மறுகாலனியாதிக்க எல்லைக்குள்  தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை ஒழித்துக் கட்டக்கோருகின்றது.


 இந்த எல்லைக்குள் சந்திரிக்கா - ரணில் மோதல் படிப்படியாக ஒரு புள்ளியை நோக்கி குவிகின்றது. இதைச் சுற்றியுள்ள அனைத்து சிறு கட்சிகளும் இதை நோக்கி கவரப்பட்டு செரிக்கப்படுகின்றது. இது மிகவும் பலம் கொண்ட ஒரு புள்ளியாகி, வேகமாகவே தமிழ் மக்களை ஒடுக்கும் ஒரு குரலாக மாறி வருகின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தின் நோக்கமும், சிங்கள இனவாதக் கட்சிகளின் ஒருமித்த நோக்கமும் ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்து வருகின்றது. இதன் அக்கம்பக்கமாக நெருங்கி வரும் புலிகள், இலங்கையின் ஒட்டு மொத்தத் தேசியத்தை அழிப்பதில் கரம் கொடுத்து வருகின்றனர். இதற்குள் தான் சந்திரிக்கா - ரணில் இடையிலான அதிகாரப் போட்டி சுடர் விட்டு எரிகின்றது.