09_2005.jpgஇதர மாநிலங்களின் முதல்வர்கள் ஏதேனும் ஒரு தொழிற்துறையை அந்நிய நிறுவனங்களின் கொள்ளைக்காக தாரை வார்த்துக் கொடுக்கிறார்கள் என்றால், ஒரிசா மாநிலத்தையே தென்கொரிய நிறுவனமான ""போஸ்கோ'' வுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து புதிய "சாதனை' படைத்துள்ளார், அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக். கடந்த ஜூன் 22ஆம் தேதியன்று தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போகாங் ஸ்டீல் கம்பெனி எனப்படும் ""போஸ்கோ'' (கழுகுஇழு) நிறுவனத்துடன் ஒரிசா மாநில அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் கனிம வளமும் தாதுவளமும் நிறைந்த ஒரிசா மாநிலம் கேள்விமுறையின்றிச் சூறையாடப்படுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முழுமையடைந்து விட்டன.

 

""அரசு செலவில் சாலை ரயில்வே துறைமுக வசதிகளைச் செய்து தருகிறோம்; ஜோப்ரா குறுக்கு அணையிலிருந்து மகாநதியின் தண்ணீரைத் தாராளமாகத் தருகிறோம்; பாரதீப் துறைமுகப் பகுதியில் ஆலை அமைக்க 6000 ஏக்கர் நிலம் தருகிறோம்; தலைநகரில் அலுவலகம் அமைத்துக் கொள்ள மையப் பகுதியில் 25 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தருகிறோம்; சிறப்பு பொருளாதார வளையம் என்ற பெயரில் வரிச் சலுகையோடு எல்லா சலுகைக ளையும் அளிக்கிறோம்; ரூ. 10 லட்சம் கோடி மதிப்புள்ள ஒரிசாவின் இரும்புத் தாது வளத்தைக் கொள்ளையடித்துச் செல்லுங்கள்; எல்லையில்லா நிலக்கரி மூல வளங்களைச் சூறையாடுங்கள்!'' என்று இந்த ஒப்பந்தத்தின் மூலம் பகிரங்கமாக அறிவித்துள்ளது ஒரிசா அரசு.

 

""பாரதீப்பில் போஸ்கோ நிறுவனம் இரும்பு எஃகு ஆலையை நிறுவும். ஆண்டுக்கு 1.2 கோடி டன் அளவுக்கு எஃகு உற்பத்தி செய்யும். 2010ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 30 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்து, 2016ஆம் ஆண்டில் 1.2 கோடி டன் அளவுக்கு விரிவடையும். இந்த ஆலையானது ரூர்கேலா எஃகு ஆலையை விட மிகப் பிரம்மாண்டமானது. ரூர்கேலா ஆலை ஆண்டுக்கு 14 லட்சம் டன் அளவுக்குத்தான் எஃகு உற்பத்தி செய்கிறது. மிகப் பெரிய போஸ்கோ ஆலை அமைவதால் 13,000 பேருக்கு வேலை கிடைக்கும். வறுமையிலும் பின்தங்கிய நிலையிலும் உள்ள ஒரிசா, இவ்வாலை மூலம் தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் மாபெரும் சாதனை படைக்கும்'' என்று ஆட்சியாளர்கள், போஸ்கோ நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து பூரித்துப் போகிறார்கள்.

 

போஸ்கோ நிறுவனம் எஃகு உற்பத்தி மட்டுமின்றி, நிலக்கரியிலிருந்து மின்சாரமும் உற்பத்தி செய்யும். பிற மாநிலங்கள் ஒரிசாவிலிருந்து நிலக்கரியை விலைக்கு வாங்கி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. ஆனால், போஸ்கோ நிறுவனம் ஒரிசாவிலிருந்து நிலக்கரியை விலைக்கு வாங்காது. ஏனென்றால், மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்நிறுவனத்துக்கு ஒரிசாவின் நிலக்கரிச் சுரங்கங்கள் இலவசமாக கையளிக்கப்படும். எத்தனை சுரங்கங்கள் இவ்வாறு இலவசமாகத் தரப்படும் என்பது பற்றியோ, எத்தனை காலத்துக்கு இவ்வாறு தரப்படும் என்பது பற்றியோ ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. இதுவரை எந்த நிலக்கரிச் சுரங்கமும் எந்தவொரு வெளிநாட்டுக் கம்பெனிக்கும் குத்தகைக்குக் கூடத் தரப்பட்டதில்லை. போஸ்கோ ஒப்பந்தம், நிலக்கரி சுரங்கங்களையும் மூலவளங்களையும் தனியார்மயமாக்குவதைத் தொடங்கி வைத்து விட்டது.

 

இந்த ஒப்பந்தத்தில், போஸ்கோ நிறுவனத்துக்கு 60 கோடி டன் இரும்புத்தாது தேவைப்படும் என்றும் அதை அரசு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 30 சதவீத இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்து அதற்கிணையாக உயர்தர தரமான இரும்புத்தாதுவை தென்கொரியாவிலுள்ள தனது ஆலையிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 40 கோடி டன் இரும்புத் தாதுவை தனது தென்கொரிய ஆலைக்கு இந்நிறுவனம் ஏற்றுமதி செய்யவும் தாராள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்தம் 100 கோடி டன் இரும்புத் தாது வளத்தை அள்ளிச் செல்ல போஸ்கோ நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

 

இதற்கு சல்லிக்காசு கூட போஸ்கோ தரவேண்டியதில்லை என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஏனென்றால், ஆலையை நிறுவுவதற்கான வெகுமதியாக (ராயல்டியாக) இந்நிறுவனத்துக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஒரு டன் இரும்புத் தாதுவின் சந்தை விலை குறைந்தபட்சம் ரூ.2000மாகவும் அதிகபட்சம் ரூ. 26,000மாகவும் உள்ளது. குறைந்தபட்ச மதிப்பீட்டின்படி பார்த்தால் கூட, 60 கோடி டன் இரும்புத்தாதுவின் விலை ரூ. 1,20,000 கோடியாகும். ஒரு டன் இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க ஆகும் சராசரி செலவு ரூ. 400 என்ற அடிப்படையில் 60 கோடி டன்னுக்கான செலவு ரூ. 24,000 கோடியை கழித்து விட்டால், ரூ.96,000 கோடியை போஸ்கோ எவ்விதத் தடையுமின்றி அள்ளிச் செல்லும். இது ஓராண்டுக்கான மதிப்பீடுதான். இந்த வகையில், ஒப்பந்தப்படி போஸ்கோ நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு அள்ளிச் செல்லும். அதாவது, குறைந்தபட்ச மதிப்பீட்டின்படியே ஏறத்தாழ 28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்புத் தாதுவை போஸ்கோ நிறுவனம் சூறையாடும். 30 ஆண்டுகள் நீடிக்கும் இந்த ஒப்பந்தம், அவசியமானால் மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இரும்புத் தாது மட்டுமின்றி குரோமியம், மாங்கனீசு, டோலோமைட், சுண்ணாம்புக்கல் முதலானவற்றை போஸ்கோ நிறுவனத்துக்கு சலுகை விலையில் வழங்கவும் ஒப்பந்தத்தில் முடிவாகியுள்ளது. இவற்றின் மூலம் எவ்வளவு செல்வம் கொள்ளை போகும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

 

இதுதவிர, போஸ்கோ நிறுவனத்துக்கு இன்னும் பல சலுகைகள் தரப்பட்டுள்ளன. போஸ்கோ ஆலைக்கு சிறப்புப் பொருளாதார வளையச் சலுகை தர மைய அரசிடம் வலியுறுத்துவதாக ஒரிசா அரசு உறுதியளித்துள்ளது. அத்தகைய சிறப்பு சலுகை வழங்கப்பட்டால், அந்த ஆலைமீது எவ்வித அரசுக் கட்டுப்பாடும் இல்லாமல் போகும். அந்த ஆலை அரசுக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயம் கூட இல்லாமல் போகும்.

 

அடுத்து, பாரதீப்பில் போஸ்கோ நிறுவனம் தனக்கென தனியாக ஒரு துறைமுகம் அமைத்துக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. தற்போதைய பாரதீப் துறைமுகத்திலும் இந்த ஆலைக்கென தனியொரு தளம் அமைத்துத் தரப்படும். இதனால் பாரதீப் துறைமுகத்தின் வருவாய் குறையும். சரக்குக் கப்பல்களின் வருகை தங்கல் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவதால், அரசு பொறுப்பிலுள்ள அத்துறைமுகம் நலிவடைந்து நட்டப்படும்.

 

மேலும், இந்த ஒப்பந்தப்படி மைய அரசானது தனது சொந்த செலவில் அரிதாஸ்பூர் பாரதீப் மற்றும் பன்சாபானல் பாரதீப் ரயில் பாதையை அமைத்துத் தரவுள்ளது. இரும்புத் தாதுவை, போஸ்கோ நிறுவனம் ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக அமையும் வகையில் இந்த ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இதுவொருபுறமிருக்க, நிலக்கரி மற்றும் இரும்புத்தாதுச் சுரங்களிலிருந்து போஸ்கோ ஆலை வரை தனி இருப்புப் பாதைகளை அமைத்துக் கொள்ள ஒரிசா அரசு அனைத்து உதவிகளையும் செய்ய உறுதியளித்துள்ளது. இதுவும் போதாதென்று, இந்த ஒப்பந்தத்தை குறையேதுமின்றி நிறைவேற்றவும் கண்காணிக்கவும் முதுநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவை ஒரிசா மாநில அரசு நிறுவியுள்ளது.

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மகாநதியிலிருந்து ஜோப்ரா குறுக்கணை கால்வாய் மூலம் போஸ்கோ நிறுவனத்துக்குத் தண்ணீர் தருவதென ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. இலவசமாகத் தரப்படுமா, விற்பனைக்குத் தரப்படுமா என்பது பற்றியோ, எவ்வளவு கோடி லிட்டர் தரப்படும் என்பது பற்றியோ இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் குறுக்கணையில் எவ்வளவு கன மீட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்படும், அதில் எவ்வளவு தண்ணீரை போஸ்கோ உறிஞ்சும் என்பது பற்றியோ, கோடைகாலத்தில் எவ்வளவு தண்ணீர் தரப்படும் என்பது பற்றியோ ஒரிசா அரசு தெளிவாக்கவில்லை.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜோப்ரா குறுக்கு அணைக் கால்வாய் மூலம் பாசனவசதி பெற்று வரும் விவசாய நிலங்களின் எதிர்கால உத்திரவாதம் பற்றியும் ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆலை அமையவுள்ள பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ள நிலையில், அம்மக்களுக்கு நிலமும் வேலைவாய்ப்பும் நிவாரணமும் நட்டஈடும் தருவது பற்றியும் ஒப்பந்தத்தில் எதுவுமில்லை. மகாநதியின் குறுக்கே ஹிராகுட் அணை கட்டப்பட்டபோது வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான பழங்குடியினருக்கு இன்றுவரை நிவாரணமோ நட்டஈடோ தராத ஆட்சியாளர்கள், இப்போது போஸ்கோ ஆலையால் வெளியேற்றப்படும் மக்களுக்கு உரிய நிவாரணம் தருவார்கள் என்று நம்புவதற்கு அடிப்படையே இல்லை.

 

தனியார்மயம் தாராளமயத்தின் முதல்கட்ட பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பெயரால் நாட்டை அடகு வைத்த பா.ஜ.க. ஓநாய்கள், இப்போது ""ஐயோ! ஒரிசா கொள்ளை போகிறதே!'' என்று ஒப்பாரி வைக்கின்றன. ஆளும் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி கட்டிக் கொண்டு பதவியை அனுபவித்து வரும் பா.ஜ.க.வின் ஒரிசா மாநிலத் தொழிலமைச்சரான பிஸ்வபூஷண் அரிச்சந்தன், தனக்கு ""போஸ்கோ'' ஒப்பந்தம் பற்றி இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டதாகப் புலம்புகிறார். தேர்தல் நெருங்குவதால், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக் கொண்டு ""போஸ்கோ'' ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக பா.ஜ.க. நாடகமாடுகிறது.

 

இதே உத்தியோடுதான் மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரிசா கணபரிஷத் ஆகிய கட்சிகளும் ""போஸ்கோ'' எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துகின்றன. மைய அரசு ""போஸ்கோ'' ஒப்பந்தத்தை ஆதரித்து செயல்படுத்திவரும் அதேசமயம், மாநில காங்கிரசில் ஒரு பிரிவு, ஒரிசாவின் மூலவளங்கள் சூறையாடப்படுவதாகப் புலம்புகிறது.

 

ஆனால், இதே ஓட்டுப் பொறுக்கிகள் 2000வது ஆண்டில் பாக்சைட் சுரங்கத் திட்டத்தால் தமது வாழ்வும் வளமும் பறிக்கப்படுவதை எதிர்த்து பழங்குடியினர் போராடிய போது, அவர்களை மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் சதிகாரர்கள் என்று அவதூறு செய்தனர். அனைத்து கட்சி மக்கள் கமிட்டிகளை நிறுவி, போராடும் மக்களுக்கு எதிராக எதிர்ப் பிரச்சார பாதயாத்திரைகளை நடத்தியதோடு, பழங்குடியினர் மீதான ஒரிசா அரசின் அடக்குமுறையை ஆதரித்து நின்றனர். இந்தக் கயவாளிகள்தான் இப்போது ""போஸ்கோ'' ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகச் சதிராடுகின்றனர். இவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு இடது, வலது போலி கம்யூனிஸ்டுகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். ஒரிசாவின் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் நிலமும் வாழ்வும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மாயாவதி, ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டு எந்தவொரு தலித் தலைவரும் போஸ்கோ ஒப்பந்தத்துக்கு எதிராக வாய்திறக்கவில்லை.

 

ஓட்டுக் கட்சிகளின் துரோகத்தைப் புரிந்து கொண்டுள்ள ஒரிசா பழங்குடியின மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடி வருகிறார்கள். ""இது எங்கள் பூமி; இதை அந்நியர்கள் அபகரிக்க ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம்!'' என்ற அறிவிப்புப் பலகையுடன் கிராம எல்லையில் மூங்கில் குழாய்களைக் கொண்ட தடுப்பரண்களைக் கட்டி ஏற்கெனவே ரயாகடா மாவட்டத்தின் பழங்குடியின மக்கள் பாக்சைட் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். ஜாஜ்பூர் மாவட்ட மக்கள் அலுமினிய ஆலை நிறுவப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள். இப்போது போஸ்கோ ஆலையால் தமது வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து பாரதீப் வட்டார மக்கள் போராடத் தொடங்கியுள்ளார்கள்.

ஒரிசா மக்களின் போராட்டம் வெறுமனே நிவாரணம், மறுவாழ்வு உரிமைக்கான போராட்டமல்ல் சாராம்சத்தில் இது நாட்டை மீண்டும் காலனியாக்கிவரும் துரோக ஆட்சியாளர்களுக்கும் தனியார் அந்நியப் பெருமுதலாளிகளின் சூறையாடலுக்கும் எதிரான போராட்டம். இந்நிலையில், நாட்டைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் நமது வாழ்வையும் வளத்தையும் பறிக்கும் தனியார்மய தாராளமயத்தை ஆதரித்து நிற்கப் போகிறோமா? அல்லது, ஒரிசா மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து, நாட்டையும் மக்களையும் சூறையாடிவரும் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போரில் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளப் போகிறோமா?

 

மனோகரன்