10_2005.jpgதாமிரவருணி ஓடும் திருநெல்வேலி நகரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கயத்தாறில் (ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட ஊர்) 10 அல்லது 15 நாளைக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. தாமிரவருணியை நம்பியிருக்கும் சீவலப்பேரி குடிநீர் திட்டத்தால் பயன் அடையும் சிவகாசி, அருப்புக்கோட்டை நகரங்களில் 15 நாளைக்கு ஒருமுறை குழாயில் தண்ணீர் வந்தாலே அதிர்ஷ்டம்தான்.

 

கோக் ஆலை அமையவுள்ள கங்கை கொண்டானுக்கு அருகே இருக்கும் ராஜபதி கிராமத்தில் 2,500 ஏக்கர் நிலம் பாசன வசதியின்றித் தரிசாகக் கிடக்கிறது. அக்கிராமத்து விவசாயிகள் ஆடு, மாடு மேய்த்து காலத்தை ஓட்டுகிறார்கள்.

 

திருநெல்வேலி மாவட்டத்திலேயே விவசாயம் செழிப்பாக நடக்கும் பகுதி என்று கூறப்படும் சிறீவைகுண்டம் வட்டாரத்தில் 14 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டில்தான் இரண்டு போகம் விளைந்திருக்கிறது அதுவும் இயற்கையின் கருணையால்.

 

தாமிரவருணியை நம்பியிருக்கும் திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி மாவட்ட மக்கள் இப்படி குடிநீருக்கும், பாசனத் தண்ணீருக்கும் அல்லாடி நிற்கும் வேளையில்தான், தாமிரவருணியை உறிஞ்ச கோக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

 

கோக், தாமிரவருணியில் இருந்து ஒரு நாளைக்கு எத்தனை இலட்சம் தண்ணீரை உறிஞ்சப் பேகிறது என்பது புதிராகவே இருக்கிறது. முதலில், தினமும் ஆறு இலட்சம் லிட்டர் தண்ணீர் தேவை என அனுமதி கேட்ட "கோக்', இப்பொழுது தினமும் 12 லட்சம் தண்ணீர் தேவை எனக் கேட்கிறது. 3.7 லட்சம் லிட்டர் கோக் தயாரிக்க 5 இலட்சம் லிட்டர் தண்ணீர் போதும் எனக் கருதும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், 12 இலட்சம் தண்ணீர் தேவை என்ற கோக்கின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. ஆனாலும், தமிழக அரசின் 'சிப்காட்" நிறுவனம் கோக்கிற்கு தினமும் 9 இலட்சம் லிட்டர் தண்ணீர் தர ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. (ஆதாரம்: நக்கீரன், 10.09.05)

 

கோக் ஆலை அமையவுள்ள கங்கைகொண்டான் பஞ்சாயத்து அடங்கியுள்ள மானூர் ஊராட்சி ஒன்றியத்தில், கோக் ஆலை இயக்கப்படுவதற்கான அனுமதி (கீதணணடிணஞ் ஃடிஞிழூணஞிழூ) தரக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கங்கை கொண்டான் பஞ்சாயத்திலும், அம்மன்ற உறுப்பினர்கள் 19.8.05 அன்று கொடுத்த விண்ணப்பத்தின் அடிப்படையில், 'கோக் ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என்ற தீர்மானம் 23.08.05 அன்று நிறைவேற்றப்பட்டது.

 

இத்தீர்மானத்தில் கையெழுத்துப் போட்ட கங்கை கொண்டான் கிராம 1ஆவது வார்டு உறுப்பினர் கே.நடராஜன், 'சிந்திக்க நேரம் கிடைக்காத காரணத்தால், வெளிநாட்டு குளிர்பான கம்பெனிக்கு எதிராகக் கையெழுத்திட்டதாக" 27.8.05 அன்று பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கிறார். இடைப்பட்ட இந்த மூன்று நாட்களில், அவரைச் சிந்திக்கத் தூண்டியது எதுவாக இருக்கும்?

 

கங்கை கொண்டான் ஊராட்சி மன்றத் தலைவர் கம்சனோ, 23.8.05 அன்று காலையில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, அன்று மாலையே தனது நிலையை மாற்றிக் கொண்டார். 'போலீசும், வேறு சிலரும் கொடுக்கும் நிர்பந்தம் காரணமாகத்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டதாக" அவர் வெளிப்படையாக பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்துள்ளார்.

 

'உம் மேல போலீசு போட்டிருக்குற கேஸ{களை வெச்சு உன்னை நெருக்குவோம். பஞ்சாயத்து கணக்கு வழக்குகளையும் நோண்ட வச்சு கம்பி எண்ண வச்சிருவோம்' என கம்சன், கோக்கிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு மிரட்டப்பட்டதாகக் கூறுகிறார், கம்சனின் மைத்துனர் பரமசிவன்.

 

இப்படிப்பட்ட நிலையில்தான் கம்சன் ஆகஸ்டு 29 அன்று எதிர்பாராதவிதமாகத் திடீரென்று மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு முன்பாக, தொடர்ந்து மூன்று நாட்கள் கம்சன் எங்கே இருக்கிறார்? எங்கே போனார்? என்ற விவரம் அவர் மனைவிக்குக் கூடத் தெரியவில்லை. ' "கம்சனை அவரது செல்போனில் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டால், 'ஹலோ" என்ற வார்த்தையைச் சொன்னதுமே, தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும்; போலீசிடம் இதுபற்றி புகார் செய்யலாம் என முடிவெடுத்த பிறகுதான், அவர் மாயமாய் மறைந்தது போலவே, திடீரென வீட்டுக்குத் திரும்பினார்" என்றும் கம்சனின் நெருங்கிய உறவினர்கள் கூறுகிறார்கள். கம்சன் திரும்பி வந்த ஓரிரு நாட்களிலேயே திடீரென உடல்நிலை மோசமாகி இறந்து போகிறார்.

 

'கோக்கிற்கு ஆதரவாக கம்சன் மாறியதும் அவரைத் தொடர்பு கொண்ட கோக் பிளாண்ட் பொறுப்பாளர்கள் லட்சுமிபதியும், கண்ணனும் உங்களைக் குளிர்விக்க குற்றாலம் கே.ஆர்.ரெசிடென்சி ஹோட்டலில் சொகுசு ரூம் போட்டிருக்கிறோம். போய் என்ஜாய் பண்ணுங்கன்னு சொல்லி, குவாலிஸ் காரையும் கொடுத்தாங்க. நான், கம்சன், துணைத்தலைவர் பெருமாள் என 5 பேர் குற்றாலம் போனோம். 3 நாள் தங்கியிருந்து, பிராந்தியில 'கோக்"கை கலந்து ஏத்திக்கிட்டாரு. 3 நாள் கழிச்சி வீட்டுக்கு வந்ததும் துடிதுடிச்சு இறந்துட்டாரு" எனக் கூறியிருக்கிறார், கம்சனுடன் குற்றாலத்திற்குப் போன குஞ்சுமணி.

 

கம்சன் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பது ஊருக்குத் தெரியும்; கோக்குக்கும் தெரியும். அப்படிப்பட்ட நோயாளியை குற்றாலத்திற்குக் கூட்டிப் போய் சீமைச் சாராயத்தால் குளிப்பாட்டி, அவரை மரணத்திற்குள் தள்ளிவிட்டிருக்கிறது, கோக் நிர்வாகம்.

 

ஆனாலும், 'கம்சன் மரணத்தில் மர்மம் இல்லை; அவர் மஞ்சள் காமாலை நோயினால் இறந்து போனதாக" திருநெல்வேலி மாவட்ட போலீசு கண்காணிப்பாளரே பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து, கோக் மீது அப்பகுதி மக்கள் சந்தேகப்படுவதை ஒதுக்கித் தள்ளுகிறார்.

 

கதறக் கதற அரிவாளால் வெட்டிக் கொல்வது மட்டும்தான் கொலையா? நஞ்சு வைத்துச் சத்தமில்லாமல் கொல்லுவதும், மஞ்சள் காமாலை நோயாளியைச் சாராயத்தில் மூழ்கடித்துச் சாகடிப்பதும் கூடக் கொலைதான்.

 

தன்னுடைய பணபலத்துக்குப் பணியாதவர்களைப் படுகொலை செய்ய கோக் தயங்கியதேயில்லை. கொலம்பியா நாட்டில் கோக் ஆலையின் தொழிற்சங்கத் தலைவர்களையும், அவர்களது பிள்ளைகளையும் கூடக் கூலிப்படை வைத்துக் கொலை செய்திருக்கிறது கோக். கோக்கின் கொலைகளைப் பட்டியல் இடுவதற்கென்றே 'கொலைகாரன் கோக்" என்றொரு இணையதளமே இருக்கிறது.

 

நியாயமாகப் பார்த்தால் கம்சனின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். தமிழக அரசும், போலீசும் இதை செய்யவில்லை. மாறாக, 'ம.க.இ.க.வினரால் தனது உடமைக்கும், தனது நிர்வாகிகளின் உயிருக்கும் ஆபத்து நேரிடலாம்" என கோக் கொடுத்த புகாரை வாங்கி வைத்துக் கொண்டதோடு, செப்.12 மறியலை காரணம் காட்டி, மாவட்ட போலீசு சட்டத்தின்படி, உங்கள் மீது ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கூடாது?'' எனப் போராட்டத் தலைமைக்கு நோட்டீசு அனுப்பியது, போலீசு.

 

தமிழக அரசும், போலீசும், கோக்கும் ஓரணியில் நிற்கும்போது, கம்சனின் குடும்பத்தினரோ, ஊர் மக்களோ கம்சனின் சாவுக்கு யாரிடம் நீதி கேட்க முடியும்?

கம்சனின் மரணம் நமக்கொரு எச்சரிக்கை. கொக்கோ கோலாவை அனுமதித்தால் கங்கை கொண்டானின் மண்ணும், தாமிரவருணி ஆறும்கூட மர்மமான முறையில் மரணமடையும். இந்தக் கணமே கோக்கை விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான் கம்சன் மரணம் நமக்கு அளிக்கும் பாடம்!


மு அழகு