12_2005.jpgநடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுணா என்ற போலி புரட்சி சிங்கள இனவாத கட்சியுடனும் ஜாதிகா ஹெல உருமயா என்ற பௌத்தமத குருமார்களின் பேரினவாதபாசிசக் கட்சியுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர அணியின் பிரதிநிதியாகிய மகிந்தா ராஜபக்சே மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையை நீண்டகாலமாக ஆண்டுவரும் பண்டாரநாயகே குடும்பத்துடன் சேர்ந்து இலங்கை சுதந்திர கட்சியை நிறுவிய சிங்கள இனவெறி அரசியல் தலைவர் ராஜபக்சேயின் வாரிசுதான் இந்த மகிந்தா ராஜபக்சே. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே, நீண்டகாலமாக ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வந்த சிங்களபாசிச வெறியர்களான ஜெயவர்த்தனே பிரேமதாசாவைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு வந்து பிரதம மந்திரியாக பதவி வகித்தவர்.

 

""நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் ரணில் மற்றும் மகிந்தா இருவருமே தோற்கடிக்கப்பட வேண்டிய துரோகிகள் எதிரிகள்; ஆகவே தேர்தலைப் புறக்கணியுங்கள்'' என்ற விடுதலைப் புலிகளின் நிலை காரணமாக ஈழத்தமிழர்கள் மிகப் பெரும்பாலும் வாக்களிக்காதபோது, சிங்கள பௌத்த பாசிசக் கட்சிகளின் வேட்பாளரான மகிந்தா வெற்றி பெற்றதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், இரண்டு சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ரணில் தோற்றுப் போயுள்ளார். நாட்டின் மொத்த வாக்காளர்களில் பாதிக்கும் மேல் 0.29 சதவீத வாக்காளர்களே மகிந்தாவை ஆதரித்துள்ளனர். சிங்கள மக்களில் ஒரு பெரும் பகுதியினர் உட்பட ஏறக்குறை பாதியளவுக்கான இலங்கை மக்கள் இன்னமும் போர் நிறுத்தம் பேச்சு வார்த்தை அமைதித் தீர்வு ஈழப் பிரச்சினைக்கான வழி என்று நம்புவதையே இது காட்டுகிறது.

 

அதனால்தான், தேர்தல்களின் போது, இலங்கையின் மீது அந்நிய ஆதிக்கம், நாடு துண்டாடப்படுவது ஆகிய ஆபத்துக்களுக்கு எதிராகவும், ஈழப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணப் போவதாகவும் கூறி ஓட்டுப் பொறுக்கிய மகிந்தா, இப்போது ""விடுதலைப் புலிகளுடன் மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்கும் அமைதி பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவேன், அவர்களின் உரிமைகளையும், விருப்பங்களையும் உறுதி செய்வேன்; சர்வதேச சமுதாயம் அதற்கு உதவவேண்டும்'' என்கிறார். ஆனால், அதற்கான முன்நிபந்தனையாக ""விடுதலைப் புலிகள் பிரிவினைவாதத்தைக் கைவிட வேண்டும், ஆயுதங்களை களைய வேண்டும், ஜனநாயக நீரோட்டத்தில் கலக்க வேண்டும், ஒரு இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தி அதை அமலாக்கவும் வேண்டும்'' என்று மகிந்தாவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. சிங்கள பௌத்த பாசிச கூட்டணியின் இந்த ஆட்சியில் இனப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு என்பது கானல் நீரே!

 

இந்த ஆண்டு மாவீரர் நினைவு நாளில் பேசிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ""இவ்வாண்டு இறுதிக்குள் மகிந்தா அரசு ஈழப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் குறைந்தபட்சம் ஒரு பிராந்திய தன்னாட்சி அதிகாரத்தை பெற விரும்புகிறார்கள். சந்திரிகா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பங்கேற்கும் சுனாமிக்குப் பிந்தைய நடவடிக்கைகளுக்கான கட்டுமான நிர்வாக அமைப்பு ஒன்றை சர்வதேச ஒத்துழைப்புடன் சுனாமி பாதிப்பு பகுதிகளின் மறுசீரமைப்புக்காக நிறுவப்பட்டது. அதை செயலிழக்கச் செய்ததன் மூலம் தற்போதைய ஆளும் கூட்டணியினர் பங்கு பெறும் ஜே.வி.பி. மற்றும் உருமயா ஆகிய அமைப்புகள் தமிழ் மக்களின் கடைசி நம்பிக்கையை குலைத்து விட்டனர். இந்த நிலையில் புதிய அரசு அமைதிப் பேச்சு வார்த்தைக்கான தனது திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அவசர மற்றும் இறுதி எச்சரிக்கை செய்கிறோம்'' என்று அறிவித்துள்ளார்.

 

புலிகளின் இந்த அறிவிப்பு எதிர்பார்த்ததை விட இறங்கி வந்திருப்பதாகவே சிங்கள அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதைவிடக் கடுமையாக மிரட்டும் தொணியிலேயே அவர் எச்சரிக்கை விடுப்பார் என்று சிங்கள கடுங்கோட்பாட்டுவாதிகள் எதிர்பார்த்தனர். ஆனால், பிரபாகரனின் இந்த வேண்டுகோள் அமைதி முயற்சி தொடர வேண்டும் என்பதை விரும்புவதாகவே தெரிகிறது. புதிய அரசு இதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

ஏற்கெனவே அமுலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம்அமைதிப் பேச்சுவார்த்தை, சுனாமி பாதிப்பு நிவாரணப் பணிகளுக்கான கூட்டு முயற்சி ஆகியவையெல்லாம் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாக இருதரப்பும் ஏற்றுக் கொண்டு நடைமுறைக்கு வந்தவை. தற்போது அத்தகைய முயற்சிகளுக்கு எத்தரப்பு தடையாக இருந்து தகர்க்கிறது என்று ஒருவருக்கு எதிராக மற்றவர் குற்றஞ்சுமத்தி உதவி தரும் நாடுகளின் நம்பிக்கையை பெறுவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு போர் என்பது இரு தரப்புமே விரும்பாததாகவே அமையும். சிங்களபௌத்த பாசிச கூட்டணியின் சார்பில் ஆட்சிக்கு வந்திருக்கும் மகிந்தா அவர்களின் நிர்பந்தத்திற்கு பணிந்து போர்த் தயாரிப்புகளுக்கே முதலிடம் தருவார். இதற்கிடையே பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்தவும் எத்தனிப்பார். அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் உலகமயமாக்கம் தாராளமயமாக்கம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள விடுதலைப் புலிகளும் சர்வதேச நிர்ப்பந்தத்தின் காரணமாக இதே போன்ற ஒரு நாடகத்தை நடத்தலாம்.

சுப்பு