01_2006.jpgஇந்தியாவில் உள்ள பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம்தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு என்று முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பிற போலி கம்யூனிச நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அங்கிருந்தெல்லாம் அரசியல் நிபுணர்கள் வந்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படுவதை நேரில் கண்டு வியந்து போனார்கள்.

 

பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசியல் அமைப்புதான் கம்யூனிச ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கண்டுபிடித்த ""நம்ம ஊரு'' த.தே.பொ.க. மணியரசன் கும்பல் உட்பட எல்லா வண்ணப் போலி கம்யூனிஸ்டுகளும் கூட பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக அரசியலமைப்பே தமது திட்டமென்று மாற்றிக் கொண்டார்கள்.

 

இந்த அரசியலமைப்பு இவ்வளவு காலம் நீடித்திருப்பது, பல தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதே இதன் வெற்றியைப் பறைசாற்றுவதாக அவர்கள் எல்லோரும் போற்றிப் புகழ்கிறார்கள். ஆனால், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தினுடைய வெற்றியின் இரகசியம் என்னவென்று அவர்கள் பேசுவதில்லை. அது இதுதான்:

 

இந்தியாவின் பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் செத்து அழுகிப் போன பிணமாகக் குப்பைமேட்டில் திறந்தவெளியில் கிடக்கிறது. அதன் முடைநாற்றம் மனிதர்களுக்குத் தெரிகிறது. ஆனால், செத்து அழுகிப் போன பிணத்தைக் கொத்தித் தின்னும் கழுகு காக்கைகளுக்கு அது ருசியான விருந்தாகவே தெரிகிறது. அந்த விருந்தில் கலந்து கொள்ளும் காக்கைகள் போல, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்கும், பதவி வகிக்கும் கட்சிகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் பொறுக்கித் தின்பதற்கு வசதிகளும் வழிவகைகளும் உள்ளன.

 

ஆளுங்கட்சிகளாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, எல்லாக் கட்சிகளுக்கும் பொறுக்கித் தின்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன என்கிற ஒரு காரணமே போதும். இதனாலேயே பல கட்சி நாடாளுமன்றம், மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற தோற்றத்தோடு நீடித்திருக்க முடிகிறது. இதுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பு.

 

இது இப்படித்தான் செயல்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. சமீபத்தில் வெளியாகி நாடே நாறும் வோல்கர் கமிசன் அறிக்கை விவகாரம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு அதன் உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கிய விவகாரம், எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இலஞ்சம் வாங்கிய விவகாரம் இவை அனைத்திலும் ஏதோ சில நபர்கள், ஏதோ ஒரு கட்சி மட்டும் சிக்கவில்லை. ஏறக்குறைய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் சிக்கியுள்ளனர்.

 

வோல்கர் கமிசன் அறிக்கை பின்னணி

 

1990களின் ஆரம்பத்தில் குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கின் சதாம் உசேன் படைகள், அந்நாட்டு எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிக் கொண்டன. குவைத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பது என்ற பெயரில் அதிநவீன ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் வந்திறங்கிய அமெரிக்கப் படைகள் வெறித்தனமான தாக்குதல் போர் நடத்தி ஈராக் இராணுவத்தை விரட்டியடித்தது. ஆனால், அமெரிக்கா அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வளமிக்க எண்ணெய் வயல்கள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தையும் தனது மேலாதிக்கம் மற்றும் மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. ""உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் உட்பட பெருந்திரள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து குவித்து வைத்திருப்பதோடு, அணுஆயுத உற்பத்திக்கான தயாரிப்பிலும் இறங்கியுள்ள சதாமின் ஈராக்கினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்குப் பேராபத்து விளைந்துள்ளது; பல ஆயிரம் ஷியா மற்றும் குர்து மக்களைப் படுகொலை செய்து மனித உரிமைகளை மீறும் குற்றங்கள் செய்துள்ளது, சதாம் உசைன் அரசு'' என்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஈராக்குக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதாரத் தடை விதிக்கச் செய்தது, அமெரிக்கா. அதோடு இராணுவ முற்றுகையும் செய்தது.

 

ஈராக்குக்கு எதிரான இந்த இராணுவ முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடையால் உலக அரங்கில் அந்நாடு பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டது. இவற்றால், எண்ணெய் வளமிக்கதாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தி உலகச் சந்தையில் இருந்து மருந்து மற்றும் உணவு போன்ற இன்றியமையாத் தேவைகளைக் கூட வாங்க முடியாமல் ஈராக் திணறியது. இலட்சக்கணக்கான குழந்தைகள் போதிய மருந்துப் பொருட்கள் கூடக் கிடைக்காமல் மாண்டு போயின.

 

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனைகளை ஏற்று, ஈராக்கிலுள்ள இராணுவஆயுத நிலைகளை ஐ.நா. பிரதிநிதிகள் சோதனையிட ஈராக்கின் சதாம் அரசு சம்மதித்தது. அதை ஏற்ற ஐ.நா. சபை, ஈராக்கில் மக்கள்திரள் பேரழிவு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இருக்கின்றனவா, அவை ஏற்கெனவே குவிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை சோதனை செய்வதற்கு தனது குழுவை அனுப்பும் அதேசமயம், ""உணவுக்கு எண்ணெய்'' என்ற இடைக்காலத் திட்டத்தை வகுத்து, அதன் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு பெட்ரோலிய எண்ணெய் விற்கவும் இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளவும் ஈராக்கை அனுமதித்தது.

 

ஆனால் அமெரிக்காவோ, தொடர்ந்து சதாம் அரசு மீது பல பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி வந்தது. இறுதியில் மக்கள் திரள் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாகவும், அவை தயாரிப்பதற்கான இரகசிய ஆலைகள் வைத்திருப்பதாகவும், ஐ.நா. சோதனைக் குழு சுதந்திரமாக ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வில்லை என்றும், அணுஆயுதங்களைக் கூட உற்பத்தி செய்வதற்கு முயல்வதாகவும், அமெரிக்கா மீதான 2002 செப்டம்பர் 11 விமானத் தாக்குதல் நடத்திய பின்லேடனின் அல்கொய்தா அமைப்புடன் அச்சதியில் ஈராக்கு பங்கு இருப்பதாகவும் பல பொய்யான பழிகள் சுமத்தி 2004இல் ஈராக்கைத் தாக்கி ஆக்கிரமித்துக் கொண்டது. சதாம் உசைன் மற்றும் அவரது சகபாடிகள் கைது செய்யப்பட்டு தண்டிப்பதற்கான விசாரணை நாடகமும் நடத்தி வருகிறது.

 

ஈராக் மீது அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, அந்நாட்டு ஆட்சியைக் கவிழ்த்து, ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியதற்கு சொல்லப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று கடந்த ஓராண்டில் மேலும் அம்பலமாகிப் போனது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலக நாடுகளின் மக்கள் அனைவரும் இந்த ஆக்கிரமிப்புப் போருக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், ஈராக்கில் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் நிறைந்த சதாம் உசைனின் ஆட்சியைத் தூக்கியெறிந்து "சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே போர் தொடுத்தோம்' என்று கூறும் அமெரிக்கா, இந்தக் கோணத்தில் விசாரணை தண்டனைக்கு ஆதாரங்களைத் தேடுகிறது.

 

ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்தவும், சதாம் ஆட்சியைக் கவிழ்த்து, நிறுவப்பட்ட பொம்மை அரசுக்கு நியாயவுரிமையைக் கோரவும் சதாமுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்தும் வேலைகளில் அமெரிக்கா இறங்கியது. பேரழிவு ஆயுதக் குவிப்பு, அல்கொய்தா பயங்கரவாதிகளின் கூட்டாளி போன்ற குற்றச்சாட்டுக்கள் பொய்த்துப் போனபிறகு, சதாமுக்கு எதிரான உள்விவகாரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தது. அதாவது "மனிதாபிமான' அடிப்படையில் ஐ.நா. சபை அளித்த ""உணவுக்கு எண்ணெய்'' திட்டத்தைக் கூட சதாம் உசைன் கும்பல் சொந்த ஆதாயத்துக்காக முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடித்திருக்கிறது என்று நிரூபிக்கும் வேலையில் ஈடுபட்டது, அமெரிக்கா.

 

உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் நடந்த இலஞ்சஊழல் முறைகேடுகளை விசாரிப்பது என்று ஐ.நா. சபை மூலம் தீர்மானித்து வோல்கர் உட்பட ஏகாதிபத்தியக் கைக்கூலிகளைக் கொண்ட விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் நோக்கம், சதாம் மீதான இலஞ்ச ஊழல் முறைகேடுகளைத் திரட்டித் தருவதுதான். இதற்காக ஐ.நா. சபையைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, சதாம் மீதான சகநாட்டவர் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்த, ஷியா, குர்து பிரிவின் பிரதிநிதிகள் என்ற பெயரில் வேறு சிலரைக் கொண்ட முகாம்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

 

ஈராக்கை ஆண்ட சதாம் உசைன் கும்பல் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றங்கள் புரியாத சுத்தமான ஜனநாயகத் தன்மை உடையது அல்ல என்பது உண்மைதான். இராணுவ பாசிச ஆட்சி நடத்தியதோடு, குவைத், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போர் நடத்திய கும்பல்தான். இந்தக் குற்றங்களை மூடிமறைப்பதற்காக இசுலாமிய மதவாதம், தேசியம், சுதந்திரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு முகமூடிகளைத் தரித்துக் கொண்டதுதான்.

 

ஆனால், இந்தக் குற்றங்களுக்காக சதாம் கும்பலை விசாரிக்கவோ, தண்டிக்கவோ சிறிதும் அருகதையற்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஏனென்றால், ஒருபுறம் பேரழிவு ஆயுதங்களை மலைமலையாக அமெரிக்காவே குவித்து வைத்திருப்பதோடு, இலஞ்ச ஊழல், மனித உரிமை மீறல்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் ஊற்றுமூலமாக அது விளங்குகிறது. மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரில் சதாமின் ஈராக்குக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கியதோடு, ஷியா, குர்து மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு ஆதரவு அளித்தும் வந்திருக்கிறது.

 

எரிகிற வீட்டிலும்கொள்ளையடிக்கும் எமகாதகர்கள்

 

கடந்த நவம்பரில் அந்த வோல்கர் கமிசன் அறிக்கை வெளியானது. உணவுக்கு எண்ணெய் திட்டத்தின் மூலம் ஒப்பந்ததாரர்கள் அல்லாத, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 270 பேருக்கு சதாமின் ஆட்சி எண்ணெய் ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கிறது. அவர்களிடமிருந்து சேவைக் கட்டணம் வசூலித்து சதாமின் ""பாத் கட்சி'' ஆதாயம் அடைந்திருக்கிறது என்று கூறுகிறது வோல்கர் கமிசன். அப்படி ஒப்பந்ததாரர் அல்லாத ஈராக் எண்ணெய் ஒதுக்கீடு செய்து ஆதாயம் அடைந்தவர்களின் வரிசையில் இந்தியாவின் மிகப் பெரிய தரகு முதலாளியும் இன்றைய ஆளும் காங்கிரசுக்கு நெருக்கமானதுமான அம்பானி குடும்பத்தின் ரிலையன்சு, காசுமீரின் பாந்தர் கட்சித் தலைவர் பீம்சிங், காங்கிரசு கட்சியின் வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் மற்றும் காங்கிரசுக் கட்சியும் இடம் பெற்றுள்ளனர்.

 

2001ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காங்கிரசுக் கட்சியின் தூதுக் குழுவுக்குத் தலைமையேற்று ஈராக்குக்குப் போன நட்வர்சிங் கூடவே தனது மகன் ஜகத்சிங் மற்றும் அவரது உறவினரும் தொழில் கூட்டாளியுமான அந்துலீப் சேகலை அழைத்துக் கொண்டு போய், அவர்கள் மூலம் 40 இலட்சம் பீப்பாய் பெட்ரோலிய எண்ணெய் ஒதுக்கீடு பெற்று, சேகலின் ""ஹம்தான் ஏற்றுமதி'' என்ற கம்பெனி பெயரில் சதாம் உசைனின் ""பாத்'' கட்சிக்கு ஜோர்டான் நாட்டு வங்கி மூலம் சேவைக் கட்டணம் செலுத்தியுள்ளனர். காங்கிரசுப் பிரமுகராக இருந்து, அக்கட்சித் தூதுக் குழுவில் சென்ற அனில் மதராணி இதை உறுதி செய்துள்ளார்.

 

இச்செய்தி வெளியானவுடன், தனக்கு எதிரான அரசியல் சதி, ஆதாரமற்றது என்று மறுத்த நட்வர் சிங்கும் அவரது மகனும் ஈராக் பயணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக உளறினர். நட்வர் சிங்குக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரசு, ஒருபுறம் மத்திய அமலாக்கப் பிரிவு மூலம் விசாரணை நடத்திக் கொண்டே, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பதக் தலைமையில் விசாரணைக் கமிசன் போட்டு பிரச்சினையை மழுப்புவதில் இறங்கியது.

 

நட்வர்சிங்கைப் பதவி நீக்கம் செய்யும்படி நாடாளுமன்றத்தில் ""கலகம்'' செய்தன எதிர்க்கட்சிகள். முதலில் நட்வர்சிங் மீது நடவடிக்கையை வலியுறுத்திய போலி கம்யூனிஸ்டுகள் பிறகு, எல்லாம் சி.ஐ.ஏ. சதி என்றும், நட்வர் சிங் இடதுசாரி முற்போக்காளர், அமெரிக்க எதிர்ப்பாளர், வோல்கர் கமிட்டியே அமெரிக்க சி.ஐ.ஏ. புனைவு என்ற நிலையெடுத்துள்ளது. நட்வர் சிங்கை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசியான மன்மோகன் சிங்கிடம் அயலுறவுத் துறையை ஒப்படைக்கவே அமெரிக்கா இப்படிச் செய்கிறது என்கின்றனர். இப்படிக் கூறுபவர்கள்தாம் தொடர்ந்து மன்மோகன் சிங் அரசையும் ஆதரிகின்றனர். மறுபுறம் நட்வர் சிங்கும் சி.பி.எம். கூறுவதுபோல, அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல. பதவியேற்ற மறுவாரமே அமெரிக்காவிற்குப் போய் புஷ்ஷிடம் மண்டியிட்டு, ஈராக்கிற்கு இந்தியப் படை அனுப்புவதை உறுதி கூறியவர்; இங்கே ஏற்பட்ட கடும் எதிர்ப்பே, அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது.

 

ஈராக் விவகாரத்தில் தன்னை ஆதரிக்காத, சதாம் ஆதரவு நட்வர் சிங்கையும், காங்கிரசையும் பழிவாங்கவே வோல்கர் கமிட்டி அறிக்கையை அமெரிக்கா தயாரித்துள்ளது என்றும் போலி கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள். ஆனால் நட்வர் மன்மோகன் சோனியா கும்பல்தான் அமெரிக்காவுடன் அணுஆயுத இராணுவ ஒப்பந்தம் போட்டது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க சதியை ஆதரித்து, அணுஆயுத தடை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஆதாரங்கள் வெளிவந்தது காரணமாக, காங்கிரசு ஊழலை மறைப்பதற்காக நட்வர் சிங்கிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ""நீ மட்டும் யோக்கியமா?'' என்ற வழக்கமான பாணியில், ஈராக் உணவு எண்ணெய் திட்டத்தால் காங்கிரசு மட்டும் ஆதாயமடையவில்லை, பா.ஜ.க.வும்தான் ஊழல் செய்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை காங்கிரசு வெளியே கொண்டு வருகிறது.

 

பா.ஜ.க. ஆட்சியில்தான் இந்த ஊழல் நடந்திருக்கிறது. ஈராக்கில் உள்ள இந்தியத் தூதர் அப்போதே இது குறித்த செய்தியை, பா.ஜ.க. அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் சமயத்தில் பா,ஜ.க. அரசுக்கு இந்த உண்மை தெரிய வந்தும் தனக்குச் சாதகமாக, காங்கிரசுக்கு எதிரான ஆயுதமாக அது பயன்படுத்தாதற்கு காரணம் இந்த ஊழலில் பா.ஜ.க.வுக்கும் பங்கு கிடைத்திருப்பதுதான் என்று எதிர் குற்றச்சாட்டு வீசப்படுகிறது. குறிப்பாக, வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா, சதாமின் மகனுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார்; அவருக்கு எண்ணெய் விவகாரத்தில் தொடர்பு இருந்தது என்று ராஜீவுக்கும் காங்கிரசுக்கும் நெருங்கிய கூட்டாளியும், காங்கிரசு அரசின் முன்னாள் வெளியுறவுச் செயலரும், உ.பி. மாநில முன்னாள் ஆளுநருமான ரமேஷ் பண்டாரி கூறுகிறார்.

 

எப்படியோ அமெரிக்கா, தனது எதிரிக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச் சூட்டின் சிதறல்கள் தனது விசுவாசிகளான இந்திய முன்னாள்இன்னாள் ஆட்சியா ளர்களையும் பதம்பார்த்து விட்டது. இந்தநாட்டில் ஜனநாயகம் பரவலாக்கப்படுகிறது என்று சொன்னால், ஊழல் பரவலாக்கப்படுகிறது; ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க் கட்சிகளுக்கும் கூட இலஞ்ச ஊழல் களுக்கான வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. சந்தேகமின்றி இந்த வகையில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மிகச் சிறந்து விளங்குகின்றது.

 

கேள்வி கேட்க இலஞ்சம்! சர்வகட்சி ஜனநாயகம்!

 

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்துக் கட்சி இலஞ்ச ஊழல் மாண்பை நிரூபிக்கும் வகையில் மேலும் சில சான்றுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. தொழில் குழுமங்களுக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதற்கு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்கும் ""வீடியோ'' காட்சிகள்; உள்ளூர் தொகுதி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் பெறும் எம்.பி.க்கள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு இலஞ்சம் கேட்கும் ""வீடியோ'' காட்சிகள் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன.

 

முந்தைய பா.ஜ.க. ஜனதா தள கூட்டணி ஆட்சியின் போது ஆயுத பேர நாடகமாடி அக்கட்சிகளின் தலைவர்கள் இலஞ்சம் வாங்கக் கூடியவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலான ""வீடியோ'' காட்சியைப் படமாக்கி ஒளிபரப்பினார், ""தெகல்கா'' செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் அனிருத் பெகல். இப்போது அவர் ""கோப்ரா போஸ்ட்'' என்ற செய்தி இணையத்தளத்தின் சொந்தக்காரரும் ஆசிரியருமாக உள்ளார். இவர் ""ஆஜ் தக்'' என்ற செய்தி அலைவரிசையுடன் இணைந்து, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

 

""கோப்ரா போஸ்ட்'' இணையத்தளம் மற்றும் ""ஆஜ் தக்'' அலைவரிசையைச் சேர்ந்த செய்தியாளர்களைக் கொண்ட குழு ஒன்று, சிறுதொழில் முனைவோர் சங்கம் என்ற பெயரில் எம்.பி.க்கள் சிலரை அணுகி, சங்கத்துக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கான பேரங்கள் நடத்தி பதினைந்தாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் கொடுத்து, அதை இரகசியமாக ""வீடியோ'' காட்சியாகப் பதிவும் செய்து ஒளி பரப்பிவிட்டது.

 

இதைப் பார்த்து ""நாங்கள் ஆழமான வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துவிட்டோம்'' என்று தற்போதைய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி பம்மாத்து பண்ணியிருக்கிறார். ஆனால், இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பது பல ஆண்டுகளாக நடப்பது எம்.பி.க்கள் உட்பட அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெரிந்த விசயம்தான்!

 

""1980கள் நெடுகவும் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் மருந்துக் கம்பெனிகள் எம்.பி.க்களைப் பயன்படுத்தி கேள்விகளும் எதிர்க் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பிக் கொண்டிருந்தது நன்றாகவே தெரியும். இந்தப் பிரச்சினை இந்தியாவில் ஒன்றும் விதிவிலக்கானதில்லை'' என்கிறார் ராஜீவ்சோனியா இருவருக்குமே நெருங்கிய காங்கிரசு மூத்த தலைவரும் மேலவை எம்.பி.யுமான ஜெயராம் ரமேஷ்.

 

""இப்போது சிக்கியவர்கள் எல்லாம் சிறிய மீன்கள்தான்; மாபெரும் சுறாக்களையெல்லாம் யாரும் நெருங்கக் கூட இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேள்வி கேட்கப் பணம் வாங்கிய விவகாரம் என்பது வெளியே தெரியும் ஒரு சிறுமுனை போன்றது தான். மலையளவு விவகாரங்கள் மறைந்து கிடக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தொகையை "படி' போலப் பெற்றுக் கொண்டு, தொழில் குழுமங்கள் சார்பில் நிரந்தரப் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்கள் பலரும், சில குறிப்பிட்ட ஆதரவுக் குழுக்களில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் யார் யார் என்பது அரசியல் வட்டாரத்திலோ, நாடாளுமன்ற வட்டாரத்திலோ தெரியாத விசயமுமல்ல.

 

""தொழில் குழுமங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்களுக்கு ரொக்கம் மட்டுமல்லாமல், இதர சலுகைகள், போனஸ், நிறுவனப் பங்குகள் (ஷேர்கள்) உள்பட பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. அவர்கள் சார்ந்துள்ள தொழில் குழுமங்கள் அல்லது அமைப்புக்கு லாபத்தை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளையே அந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேட்கின்றனர். ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் தொழில் நிறுவனக் குழுமங்கள், தம் எதிரி நிறுவனங்களை முடக்குவதற்கான கேள்விகளை நாடாளுமன்றத்தில் கேட்பதற்கு அரசியல்வாதிகளைக் கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்தன'' (தினமணி 19.12.05) என்று எழுதுகிறார், மூத்த செய்திக் கட்டுரையாளர் நீரஜா சௌத்ரி.

 

மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுவது பழைய, ஒப்பீட்டு ரீதியில் சிறிய விசயம்தான். நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்துக்குக் கொள்கை முடிவுகளைப் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களாகவே தங்கள் பிரதிநிதிகளை தொழில் நிறுவனங்கள் நியமிக்கச் செய்கின்றன. இதற்கும் மேலேபோய், தரகு அதிகார முதலாளிகளே நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிகளையே அரசியல் கட்சிகளிடம் பேரம்பேசி வாங்கி விடுகின்றனர். பா.ஜ.க. மற்றும் காங்கிரசைப் போலவே, மாயாவதி, முலயம் சிங் கட்சிகள் முக்கியமாக இதைச் செய்கின்றன.

 

ஒழுக்க சீலர்களின் கட்சி என்று நாடகமாடும் பா.ஜ.க.வினர் ஆறுபேரும், பிழைப்புவாத மாயாவதி கட்சியினர் மூவரும், லல்லு, முலயம், காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவருமாக 11 எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்குபவர்களின் ""வீடியோ'' காட்சியில் சிக்கியுள்ளனர். பா.ஜ.க. தமது கட்சிக்காரர்கள் மீது முதலில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் நாடாளுமன்றத்தில் இருந்து அவர்களை நீக்குவதற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாதி அரசியல் நடத்தும் மாயாவதி, லல்லு, முலயம் கட்சிகளுக்கு லஞ்ச ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை. இதெல்லாம் தனது கட்சிக்கு எதிரான சதி என்று கூறும் மாயாவதி தனது ஊழல் எம்.பி.க்களுக்கு வக்காலத்து வாங்கி நியாயப்படுத்தியிருக்கிறார்.

 

இந்த இலஞ்ச நடவடிக்கை அம்பலமாக்கப்பட்ட அதேபாணியில் அடுத்ததாக, ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சிக்கு என்று தரப்படும் நிதியை ஒதுக்கீடு ஒப்புதல் கொடுப்பதற்காக, மூன்று பா.ஜ.க., இரண்டு முலயம் கட்சி, மாயாவதி, காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவர் என ஏழு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை ""ஸ்டார்'' அலைவரிசை ""வீடியோ'' காட்சி எடுத்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

 

கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற விவகாரத்தில் பரபரப்பாகவும், உடனேயும் நடவடிக்கை எடுத்த கட்சிகளும், நாடாளுமன்றமும் இரண்டாவது விவகாரத்தில் அப்படிச் செய்யவில்லை. இவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி சம்பந்தப்பட்ட அமைச்சக விசாரணை என்பதாக திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இன்னும் கொஞ்ச காலத்தில் ""நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம்தான்'' என்று எல்லாக் கட்சிகளும் வெளிப்படையாகவே மாற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ""சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்ததற்காக எம்.பி. பதவியைப் பறிப்பது என்பது மிகக் கடுமையான தண்டனை என்று அவர்கள் கூறுவார்கள்'' என்கிறார், நீரஜா சௌத்ரி. இப்படியே போனால், ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து யாருமே தப்ப முடியாது; ஆகவே இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மாற்றி விடுவார்கள்.

 

""கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டும்தான் இதிலெல்லாம் சிக்காது ஒழுக்க சீலர்கள்'' என்று அறிவுஜீவிகளால் பாராட்டப்படுகிற இவர்கள், சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்பதுதான் உண்மை. 20,30 சினிமா படங்களை அருவெறுப்பாக எடுத்துக் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அவற்றுக்கு நடுவே ஒரு அற்பத்தனமான, பத்தாம்பசலிக் குடும்பப் படத்தையும் எடுத்து காசு பார்ப்பது போன்றது போலி கம்யூனிச கட்சிகளின் செயல். ஏற்கெனவே பன்றித் தொழுமாகி விட்டது நாடாளுமன்ற ஜனநாயகம். அந்தப் பன்றிகள் மீது பன்னீர் தெளித்து மணம் பரப்புவதுதான் இவர்கள் வேலை.

 

"""நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதே கேலிக் கூத்து' என்று காலம் காலமாக தீவிர கம்யூனிஸ்டுகள் சொல்லி வருவது உண்மைதானோ என்று பொதுமக்கள் வீதிக்கு வீதி பேசும் நிலை ஏற்பட்டிருக்கிறது'' என்று எழுதுகிறது, பிரபல பார்ப்பன கிசுகிசு ஏடான ஜூனியர் விகடன். இதே அச்சம்தான் போலி கம்யூனிஸ்டுகளுக்கும்! ஆனாலும் இந்த உண்மையை என்ன செய்தும் மூடி மறைத்துவிட முடியாது!

 

மு ஆர்.கே.