அலுத்துப் படுத்து
விழித்துப் பார்க்க
கடிகாரமுள் கண்ணைக் குத்தும்.

கருக்கலின் மார்பில்
ஆவின் சுரக்கும்
பெண்ணின் கனவுகள்
நெஞ்சில் வரளும்
தவிக்கும் குழந்தைக்கு
அழுத்திப் பால் கொடுக்க
கிழக்கில் இரத்தம் கட்டும்.

 


பரபரக்கச் சோறு பொங்கி
பேருந்து பிடிக்க
'அன்னநடை' தொலை

ந்து போகும்.

நெருக்கும் பயணத்தில்
நடக்கும் பாதையில்
கண்களின் வக்கிரம்
உடற்தோல் உரிக்கும்
 
பாத்திரம் துலக்கி
துணி வெளுத்து
ஓய்ச்சலின்றி அடங்கும் விசும்பலில்
பெய்யெனப் பெய்யும் 'கற்பின் மழை'

கணவனுக்கு, குழந்தைக்கு
குடும்பத்துக்கு
பங்குபோட்டபின்
மீதமிருக்கும் இரத்தம்
சம்பளத்தில் வடியும்.

கல்லாய் மண்ணாய்
கருதிய கணவன்
ஒண்ணாந்தேதி உவமை சொல்வான்,

"காந்தள் மலர்க் கைகள்
உன் கைகள்"

- துரை. சண்முகம்
புதிய கலாச்சாரம் பிப்'96 இதழிலிருந்து....
http://yekalaivan.blogspot.com/2008/05/blog-post_15.html