07_2006.jpg

சட்டசபைத் தேர்தல்கள் முடியும்வரை காத்திருந்துவிட்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதன் மூலம், மக்களின் முதுகில் குத்தும் நம்பிக்கை துரோகிகள்தான் காங்கிரசு கும்பல் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கோதுமை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கும்பொழுது, எரிகிற நெருப்பில்

 எண்ணெய் ஊற்றுவது போல, பெட்ரோல் (லிட்டருக்கு நான்கு ரூபாய்), டீசல் (லிட்டருக்கு இரண்டு ரூபாய்) விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

 

""நியாயமாகப் பார்த்தால், பெட்ரோலுக்கு ரூ. 9.33ம், டீசலுக்குரூ. 10.43ம், மண்ணெண்ணெய்க்கு ரூ.17.16ம், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 114.45ம் உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், சாதாரண மனிதனின் நலன் கருதி அவ்வளவு பெரிய சுமையை நாங்கள் மக்கள் மீது ஏற்றி வைக்கவில்லை'' என மன்மோகன் ப.சிதம்பரம் கும்பல், இந்த விலை உயர்வுக்குத் திமிராகப் பதில் அளித்திருக்கிறது.

 

வழக்கம் போலவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துவிட்டதால்தான், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதாகக் கூறுகிறது, மைய அரசு. இவர்களின் வாதப்படி பார்த்தால், இந்தியாவைப் போல கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நாடுகளிலும், பெட்ரோல், டீசல் விலை ஏறத்தாழ இந்தியாவில் இருப்பதைப் போல இருக்க வேண்டும்.

 

ஆனால், சந்தைதான் சரக்கின் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என முழுச் சுதந்திரம் நிலவும் அமெரிக்காவில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 27.51தான். கனடாவில் ரூ.22க்கும், சீனாவில் ரூ. 18.73க்கும்; அண்டை நாடான பாகிஸ்தானில் ரூ. 27க்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. ஆனால், இந்தியாவிலோ ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 51.83. மற்ற நாடுகளை விட, இந்தியாவில் பெட்ரோலின் விலை இரு மடங்குக்கும் அதிகமாக விற்கப்படுவதன் காரணம் என்ன?

 

கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் (ஆயில் இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், இந்திய எரிவாயு ஆணையம்) எண்ணெயைச் சந்தையில் விற்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு (பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம்) ஒரு லிட்டர் பெட்ரோலை, ரூ. 18.10 க்கும்; ஒரு லிட்டர் டீசலை ரூ. 19.75க்கும் தான் விற்பதாகக் கூறுகிறார், சுப்பிரமணிய சுவாமி. அதே பெட்ரோல், டீசலின் விலைகள், ""பங்க்''குகளில் விற்கப்படும்பொழுது, இருமடங்காக எகிறிப் போவதன் மர்மம் என்ன?

 

இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் மீதும், அதிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல், மண்ணெய்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதும் மைய மாநில அரசுகள் விதித்துவரும் பலவிதமான வரிகள்தான் இந்த அநியாய விலைக்கு காரணம். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் (ரூ. 51.83) ஏறத்தாழ 57 சதவீதமும், ஒரு லிட்டர் டீசலின் விலையில் (ரூ. 35.95) ஏறத்தாழ 36 சதவீதமும் பல்வேறு வரிகளாக விதிக்கப்பட்டுள்ளன. ஒரு பொருளின் சந்தை விலையில் மதிப்பில் பாதிக்கு மேல் வரியாக மக்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது என்றால், இதனைச் சட்டபூர்வமாக நடக்கும் வழிப்பறிக் கொள்ளை என்றுதான் சொல்ல வேண்டும்.

 

மைய அரசு பெட்ரோலியப் பொருட்கள் மீது சுங்கவரி, கலால் வரி, கூடுதல் கலால் வரி, கல்வி வரி, ராயல்டி, ""செஸ்'' என்ற உற்பத்தி தீர்வை ஆகிய வரிகளை விதிக்கிறது. மாநில அரசுகளுக்கு மைய அரசைப் போலக் கொள்ளையடிக்கும் அதிகாரம் இல்லாததால், விற்பனை வரியை மட்டும் விதிக்கின்றன.

 

ஒரு ஆண்டில் மைய அரசால் வசூலிக்கப்படும் மொத்த கலால் வரியில் 44 சதவீதம், பெட்ரோலியப் பொருட்களின் மூலம் கிடைக்கிறது. ஒரு ஆண்டில் மைய அரசின் மொத்த வருமானத்தில் 21 சதவீதம், பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள்; பெட்ரோலிய பொதுத்துறை நிறுவனங்கள் மைய அரசுக்கு வழங்கும் இலாப ஈவு ஆகியவற்றின் மூலம் கிடைக்கிறது. மாநில அரசுகளுக்குக் கிடைக்கும் மொத்த வரி வருமானத்தில், ஏறத்தாழ 30 சதவீதம் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் விற்பனை வரி மூலம் கிடைக்கிறது.

 

மைய மாநில அரசுகளைப் பொருத்தவரை பெட்ரோலிய பொருட்கள் என்பது பொன் முட்டையிடும் வாத்து. பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் ஒவ்வொரு முறை உயர்த்தப்படும்போதும், மைய மாநில அரசுகளின் வரி வருமானமும் எகிறிப் பாய்கிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் 200203 ஆம் ஆண்டில் மைய அரசிற்குக் கிடைத்த வருமானம் 64,595 கோடி ரூபாய். இது, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வினால், 200506 ஆம்ஆண்டில் 77,800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மாநில அரசுகளுக்கு விற்பனை வரி மூலம் 200203 ஆம் ஆண்டில் கிடைத்த வருமானம் 32,150 கோடி ரூபாய், 200506 ஆம் ஆண்டில் 48,800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கே ஆண்டுகளில் மையமாநில அரசுகளுக்குக் கிடைத்துள்ள கூடுதல் வரி வருமானம் ஏறத்தாழ 30,000 கோடி ரூபாய்.

 

இது போக, மண்ணெண்ணெய்க்கும் சமையல் எரிவாயுவுக்கும் கொடுத்துவந்த "மானியத்தை', 11,140 கோடி ரூபாயில் இருந்து 3,000 கோடி ரூபாயாகக் குறைத்துக் கொண்டதன் மூலம் மைய அரசிற்குக் கிடைத்துள்ள ""எக்ஸ்ட்ரா'' வருமானம் 8,000 கோடி ரூபாய். உள்நாட்டில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் ""செஸ்'' வரியின் மூலம் கிடைக்கும் வருமானம் 7,500 கோடி ரூபாய். இந்த வரி வருவாய் போக, பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையின் மூலம் மைய அரசிற்குக் கிடைக்கும் இலாப ஈவு தனி.

 

மையமாநில அரசுகள் பல ஆண்டுகளாக நடத்தி வரும் இந்த வரிக் கொள்ளையைக் குறைத்துக் கொண்டாலே, பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துவிடும். ஆனால், வரி குறைப்புக்குத் தயாராக இல்லாத மைய அரசு, பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தியதன் மூலம், மேலும் 10,000 கோடி ரூபாய்க்கு வருமானம் தேடிக் கொண்டுவிட்டது.

 

கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 200405 கிடைத்துள்ள இலாபம் 15,600 கோடி ரூபாய்; 200506 ஆம் நிதி ஆண்டின் முதல் 9 மாதத்தில் கிடைத்துள்ள இலாபம் 14,600 கோடி ரூபாய். உண்மை இப்படியிருக்க, மைய அரசோ, பெட்ரோலியப் பொருட்களை சந்தை விலைக்குக் குறைவாக விற்பதால், பெட்ரோலிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு 73,500 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புளுகுணி பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

 

தனியார் முதலாளிகள் நட்டக் கணக்குக் காட்டுவதற்காகத் தங்கள் குடும்ப நிறுவனங்களைத் தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பதைப் போல, மையஅரசும் எண்ணெய் சுத்திகரிப்பு பொதுத்துறை நிறுவனங்களையும், பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்யும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனித்தனியாக பிரித்து வைத்துக் கொண்டு, நட்டம், நட்டமென முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

 

பெட்ரோலியப் பொருட்களுக்கு இன்னமும் மானியம் வழங்குவதால்தான், பெட்ரோலிய பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூசாமல் புளுகி வருகிறார், மன்மோகன் சிங். மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது, இருபது ரூபாயில் இருந்து முப்பது ரூபாய்க்குள் விற்க வேண்டிய பெட்ரோலை, ஐம்பது ரூபாய்க்கு விற்றுக் கொண்டு, பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியம் வழங்குகிறோம் என்றால், இதைவிட மோசடித்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

 

பெட்ரோலிய பொதுத்துறை நிறுவனங்கள் உண்மையிலேயே நட்டத்தில் இயங்குவதாக வைத்துக் கொண்டால், மக்களிடமிருந்து பறிக்கப்படும் 1,26,600 கோடி ரூபாய் வரியில் இருந்து இந்த நட்டத்தைச் சரி செய்து கொள்ள முடியும். அதற்கு மைய அரசோ, மாநில அரசுகளோ தயாராக இல்லை. மாறாக, வரியைக் குறைத்தால், வரியைக் கொண்டு நட்டத்தை ஈடு செய்தால், சமூக நலத் திட்டங்களுக்குச் செலவு செய்யப் பணம் இல்லாமல் போய்விடும் எனப் பயமுறுத்துகிறார், ப.சிதம்பரம். நம்மிடமிருந்து நைசாக உருவிக் கொண்ட பணத்தில் இருந்து கொஞ்சத்தை நமக்கே திருப்பித் தரும் இந்த ஜேப்படி திருடர்களின் கருணையை என்னவென்று சொல்வது?

 

பொதுமக்கள் வாங்கிப் பயன்ப டுத்தும் பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரியைக் கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ள மறுத்துவரும் மைய அரசு, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு 4,000 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. உள்நாட்டில் உள்ள கச்சா எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வரிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இந்த வரிச் சலுகைகளை நிறுத்தினாலே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை நான்கு ரூபாயும்; ஒரு லிட்டர் டீசலின் விலையை இரண்டு ரூபாயும் உயர்த்த வேண்டிய ""கட்டாயம்'' வந்திருக்காது.

 

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயருவதற்கு, அமெரிக்கா நடத்திவரும் தீவிரவாதத்துக்கு எதிரான போரும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. மேற்காசியாவிலும், மத்திய ஆசியாவிலும் உள்ள கச்சா எண்ணெய் வளத்தை அமெரிக்காவின் முழுக் கட்டப்பாட்டில் கொண்டு வரும் நோக்கத்தோடுதான் இந்தப் போரே நடத்தப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தியிலும், வியாபாரத்திலும் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்பதற்காகத்தான், மலிவான விலையில் எரிவாயு கிடைக்க வாய்ப்பிருந்த, இந்தியாஈரான் குழாய் எரிவாயு திட்டத்தைக் கைகழுவினார், மன்மோகன் சிங்.

 

பொது போக்குவரத்தை அதிகப்படுத்தி, கார்இரு சக்கர வாகனங்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தினால், பெட்ரோல் டீசல் நுகர்வைக் கணிசமாகக் குறைக்க முடியும். ஆனால் ஆளுங்கும்பலோ, இதற்கு நேர்மாறாக பன்னாட்டு மோட்டார் நிறுவனங்களின் இலாபத்திற்காக, பொது போக்குவரத்து வசதியைக் குறைத்துக் கொண்டே போகிறது. மூலவளத்தை உறிஞ்சித் தின்னும் இந்த கார்இரு சக்கர வாகனங்களின் விற்பனை தாராளமயத்தின் சாதனையாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் சேவைக்காக மக்களைக் கொள்ளையடிப்போமே தவிர, மாற்று வழியைப் பற்றிச் சிந்திக்க மாட்டோம் என்பதுதான் மன்மோகன் சிங் ப.சிதம்பரம் கும்பலின் நிலைப்பாடு. முதலாளித்துவ அரசுதான் மிகப் பெரிய சுரண்டல் நிறுவனம் என மாமேதை மார்க்ஸ் கூறியதை, இந்த பெட்ரோல்டீசல் விலை உயர்வு அப்பட்டமாக நிரூபித்துக் காட்டிவிட்டது.

 

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் தாராளமாக வரிச் சலுகைகள் காட்ட வேண்டும். மக்களின் மீது வரிகட்டணச் சுமைகளை ஏற்றி வைத்து, அரசின் கஜானாவை நிரப்பிக் கொள்ள வேண்டும் இதுதான் தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை.

 

இந்தியாவில் தாராளமயம் அமலுக்கு வந்தபின்தான், இதுவரை கண்டும், கேட்டிராத வகையில் பல்வேறுவிதமான சேவைகள் (தொலைபேசி இணைப்பு, வங்கியில் காசோலை வாங்குவது போன்றவை) மீதும் வரி விதிக்கப்பட்டு, பொதுமக்கள் சுரண்டப்படுவதைப் பார்க்கிறோம். இந்த அடிப்படையில்தான் பெட்ரோலியப் பொருட்களின் மீது அநியாய வரி விதிக்கப்படுவதையும், அவற்றின் விலை தாங்க முடியாத அளவிற்கு உயர்த்தப்படுவதையும் பார்க்க வேண்டும்.

 

கச்சா எண்ணெயின் விலை சர்வதேசச் சந்தையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலையை சந்தைக்கு ஏற்றவாறு தீர்மானிக்கக் கூடாது என்ற மைய அரசின் கொள்கை, தாராளமயத்தின் பின்தான் நீக்கப்பட்டது. மைய அரசின் அதிகாரத்தில் உட்கார்ந்திருந்த பொழுது, பா.ஜ.க.தான் உலகவங்கி ஐ.எம்.எப்இன் உத்தரவுக்கு ஏற்ப இந்தக் கொள்கையை நீக்கியது. இன்று அவர்கள் உத்தமர்களைப் போல, பெட்ரோல்டீசல் விலையை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

 

ஆட்சியில் இருந்தால் விலை உயர்வை ஆதரிப்பது, எதிர்க்கட்சியாக இருந்தால் விலை உயர்வை எதிர்ப்பது என்ற நாடகத்தை ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் திறம்பட நடத்தி வருகின்றன. ஒருபுறம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்துக் கொண்டு, இன்னொருபுறம் மன்மோகன் ப.சிதம்பரம் கும்பலின் ஆட்சிக்கு ஆதரவையும் கொடுத்துக் கொண்டு இருக்கும் இடதுசாரிக் கட்சிகளின் அரசியல் மோசடி, சந்தர்ப்பவாத அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து வருகிறது.

 

ஓட்டுக் கட்சிகளைப் பொருத்தவரை பெட்ரோல் டீசல் விலை உயர்வு தனியார்மயம் தாராளமயத்தின் விளைவு அல்ல் மாறாக, மன்மோகன் சிங் ப.சிதம்பரத்தின் தவறான பொருளாதார முடிவு. மன்மோகன் சிங் ப.சிதம்பரத்தை அம்பலப்படுத்திப் போராடினால், எதிர்க்கட்சிகளுக்கு அடுத்த தேர்தலில் மறுவாழ்வு கிடைக்கும். ஆனால், தனியார்மயம் தாராளமயத்தை எதிர்த்தால், ஓட்டுக்கட்சி தலைவர்களின் அரசியல் வாழ்வே அஸ்தமனமாகி விடும் அல்லவா!

 

மு ரஹீம்