கொல்கத்தா நகரைச் சேர்ந்த மின்சார ஒப்பந்தத் தொழிலாளர்கள், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்வதாக இருந்தனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காகத் துண்டுப் பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 லாரிகளில் ஒரு கும்பல் வந்திறங்கியது. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கøக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. இரத்தம் சொட்டச் சொட்ட அவர்கள் சிதறி ஓடியும், அவர்களைத் துரத்திக் கொலைவெறியுடன் தாக்கியது.

 இத்தாக்குதலில் ராம் பர்வேஸ்சிங் என்ற தொழிலாளி உயிரிழந்தார். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இப்படி ஈவிரக்கமின்றி ஒருவரை அடித்துக் கொன்றது ஏதோ ரவுடிக் கும்பல் அல்ல. தொழிலாளி வர்க்கத் தோழனாகத் தன்னைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் சி.ஐ.டி.யு.வின் குண்டர்கள்தான் அவர்கள்.


கொல்கத்தாவுக்கும், அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் மின்சாரம் வழங்கும் ""கல்கத்தா மின் விநியோகக் கழகத்து''க்காக ஒப்பந்த அடிப்படையில் மின்கம்பிகள் பதிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் இந்தத் தொழிலாளர்களை, அரசு மின்சார ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கியக் கோரிக்கை. உயர் அழுத்த மின்கம்பிகளை நிலத்தடியில் புதைக்க மண்ணைத் தோண்டும் இவர்கள் தவறுதலாக ஏற்கெனவே பதிக்கப்பட்டுள்ள மின்கம்பிகளைத் தொட்டுவிட நேரும்போது கருகிச் சாகும் அபாயம் மிக்க வேலையைச் செய்பவர்கள். இவர்களை மின்சாரத் தொழிலாளர்களாக அங்கீகரித்தால் மட்டுமே தினசரி ஊதியமாக ரூ. 225ம், பணிக்காலத்தில் உயிர் இழப்பின் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சமும் இவர்களுக்குக் கிடைக்கும். இதுவரை அவர்களை அரசு, கட்டுமானத் தொழிலாளர்களாக மட்டுமே அங்கீகரித்து வந்துள்ளதால், இப்போது கிடைக்கும் தினக்கூலி ரூ. 110 மட்டுமே. இழப்பீட்டுத் தொகையோ ரூ. 1.5 லட்சம்தான்.


இந்தத் தொழிலாளர்கள், "கல்கத்தா மின்விநியோகக் கழக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்' எனும் அமைப்பின் கீழ் திரண்டு இக்கோரிக்கையை வைத்துப் போராடியதற்காகத்தான் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். சி.ஐ.டி.யு.வில் சேராமல் சுயேச்சையான தொழிற்சங்கம் கட்டி, வேலைநிறுத்தம் செய்யத் துணிந்தமைக்காகத்தான் இந்தக் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர், பாட்டாளி வர்க்கத்(!) தொழிற்சங்கத்தினர்.


சுயேச்சையான தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்கிக் கொலை செய்த குற்றத்துக்காக சி.ஐ.டி.யு. அமைப்பைச் சேர்ந்த கௌரங் தத்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


""இயல்பாகவே ஆலை அதிபர்களின் ஆதரவாளர்களாக அரசு இருப்பது வழக்கம். 30 வருடங்களாக முதலாளித்துவ அரசை நடத்தி வரும் சி.பி.எம். அரசில் சி.ஐ.டி.யு.வும் அரசின் நீட்சியாக மாறிவிட்டது. தொழிலாளர் போராட்டம் என்பதெல்லாம் சி.ஐ.டி.யு.வின் செயல் திட்டத்திலேயே இல்லை. தொழிலாளர் பிரச்சினை என்று வரும்போதெல்லாம், சி.ஐ.டி.யு. தொழில் அதிபர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பேரம் பேசி வருகிறது'' என்று சர்மிஸ்தா சவுத்ரி எனும் பெண் தொழிற்சங்கவாதி குற்றம் சாட்டுகிறார்.


""தொழிலாளர்களின் பாதுகாப்பு நன்றாகவே உள்ளது. நாங்கள் சி.ஐ.டி.யு. வுடன் நெருக்கமாக செயல்படுகிறோம்'' என்று ஒப்பந்தத்தின் பேரில் மின்கழகத்துக்கு ஆட்களை அமர்த்தும் முதலாளிகளில் ஒருவரான அபாஸ் சாட்டர்ஜி, சி.ஐ.டி.யு. செய்துவரும் கருங்காலி வேலைக்கு நற்சான்று வழங்குகிறார்.


ஒரு மாநிலத்தின் தலைநகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் மாற்றுத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை வெறிகொண்டு தாக்கிக் கொலை செய்யத் துணிந்த சி.பி.எம். கட்சியினர், ஊடகங்களே உட்புக முடியாத நந்திகிராமில் எவ்வளவு அட்டூழியங்களைச் செய்திருப்பார்கள்? இவர்கள் நந்திகிராமில் நடத்திய கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை "இந்திய புரட்சிகர ஜனநாயக முன்னணி' எனும் மனித உரிமை அமைப்பு தனது அறிக்கையில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.


மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, தமிழ்நாட்டில் சி.ஐ.டி.யு. பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. இதே கோரிக்கையை முன்வைத்துக் கொல்கத்தாவில் போராடும் தொழிலாளர்களைத் தாக்க சி.ஐ.டி.யு. குண்டர்களை ஏவுகிறது. கைதேர்ந்த பாசிஸ்டுகளுக்கே உரிய வகையில் செயல்பட்டு வரும் இந்தக் கருங்காலிகளைக் களத்தில் இறங்கி முறியடிக்காமல் தொழிலாளி வர்க்கம் தன்னைக் காத்துக் கொள்ள முடியாது என்பதையும், வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் இனி சி.ஐ.டி.யு.வில் இயங்க முடியாது என்பதையும் கொல்கத்தாவில் நடந்துள்ள கொலை நிரூபித்துக் காட்டிவிட்டது.


· செங்கதிர்