நேபாளத்தில் 10.2.2008 அன்று நடைபெற்ற அரசமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) சார்பில் 10 வழக்குரைஞர்கள் சர்வதேசப் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். நேபாள நாட்டின் தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 856 பார்வையாளர்கள், நேபாளத்தில் தேர்தல் நடைபெற்ற எல்லாத் தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். சர்வதேசப் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்தத் தேர்தல் அமைதியாகவும், முறைகேடுகள் இன்றியும் நடைபெற்றது என்று 856 சர்வதேசப் பார்வையாளர்களும் ஒருமனதாக அறிவித்தனர்.

 


நேபாளத்தில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த மன்னராட்சியை அகற்றும் பொருட்டு நடைபெற்றுள்ள இந்தத் தேர்தல், மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தேர்தல் நேபாள மாவோயிஸ்டு கட்சி நடத்திய 10 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் மற்றும் மக்கள் இயக்கம் தோற்றுவித்த சாதனை என்று கூறுவது மிகையல்ல. மன்னராட்சியை அகற்றுவது, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்துவது என்ற இரு கோரிக்கைகளுமே மாவோயிஸ்டுகளால் மட்டுமே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகும்.


எனினும், இந்தத் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு மாவோயிஸ்டுகள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற பொய்ப்பிரச்சாரத்தை அமெரிக்க அரசு கட்டவிழ்த்து விட்டிருந்தது. இதனையொட்டி, இத்தேர்தலைக் கண்காணிக்கும் பொருட்டு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் தலைமையில் நூற்றுக்கணக்கான தேர்தல் பார்வையாளர்களும் வந்திருந்தனர்.


தேர்தலில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு வாக்குகளைப் பதிவு செய்தனர். ஒன்று, அரசமைப்பு நிர்ணயசபை உறுப்பினரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கானது. மற்றொன்று, விகிதாச்சார அடிப்படையில் கட்சிகளின் பெரும்பான்மையைக் கண்டறிவதற்கானது. இந்த முறையில், வெகுஜன வாக்கெடுப்பின் அடிப்படையில் அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களால் அரசியல் சட்டம் இயற்றப்படுவது என்பது இந்தியா உள்ளிட்ட பல ஜனநாயக நாடுகளிலும் நடந்ததில்லை. அந்த வகையில் நேபாளத்தில் நடைபெற்றுள்ள இந்தத் தேர்தல், அரியதொரு நிகழ்வாகும்.


மன்னராட்சியின் கீழ் இதற்கு முன் நடைபெற்றுள்ள தேர்தல்களில் நேபாளத்தின் மாதேசி உள்ளிட்ட பல தேசிய சிறுபான்மையினர்களுக்கும் ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கட் பிரிவினருக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படவேண்டும் என்பது மாவோயிஸ்டுகளின் மிக முக்கியமான கோரிக்கையாகும். அதன் அடிப்படையில் இந்தத் தேர்தலில்தான் முதன்முறையாக நேபாளத்தின் எல்லாக் குடிமக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலும் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது.
இத்தேர்தல் மூலம் நேபாள மன்னராட்சி அகற்றப்பட்டால் உலகின் ஒரே இந்து அரசு இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தினால், இந்தியாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், இந்திய எல்லையை ஒட்டியுள்ள நேபாளப் பகுதிகளில், மாதேசி இனத்தினர் மத்தியில் கலகத்தைத் தூண்டி விட்டனர். தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த நிராயுதபாணிகளான மாவோயிஸ்டுகள் 20க்கும் மேற்பட்டோரைப் படுகொலையும் செய்தனர். இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தனர். எனினும் மாதேசி பகுதிகள் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் இத்தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பார்வையாளர்கள் குழு காத்மாண்டு, சித்வான், பீர்கஞ்ச், ஜனக்பூர், பிராட் நகர், நேபாள் கஞ்ச், புட்வால், போக்ரா ஆகிய முக்கிய பகுதிகளைச் சேர்ந்த, 25 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டது. பார்வையிட்ட எந்த வாக்குச்சாவடியிலும் வன்முறையோ, முறைகேடுகளோ, கள்ள வாக்குகள் குறித்த புகார்களோ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளம் முழுவதும் அமைதியாகவே தேர்தல் நடந்தது. ஒரே ஒரு தொகுதியில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள், மாவோயிஸ்டு தொண்டர்கள் 8 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். மாவோயிஸ்ட் கட்சியின் தேர்தல் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் யாரையும் கொன்றதாகப் புகார் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்றசட்டமன்றத் தேர்தல்களில் வழமையாக நடைபெறும் கள்ளவாக்கு, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், சாராயம், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, மிரட்டுவது போன்ற அராஜகங்கள் சீரழிவுகள் எதுவும் நேபாளத் தேர்தலில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பிரம்மாண்டமான விளம்பரங்கள், ""டிஜிட்டல் பானர்''கள், ஆடம்பர அணிவகுப்புகள், தலைவர்களின் ""கட்அவுட்'' டுகள் போன்ற எதையும் நேபாளத்தில் காணமுடியவில்லை. சுவரெழுத்துக்களும் கட்சிக் கொடிகளும் தவிர வேறு விளம்பரங்கள் எதுவும் இல்லை. நீண்ட வரிசைகளில் பொறுமையாகக் காத்திருந்து மக்கள் வாக்களித்தனர். பாதுகாப்புப் பணி என்ற பெயரில் போலீசோ, இராணுவமோ அதிகம் ஈடுபடுத்தப்படவில்லை. நேபாள இராணுவமும், மாவோயிஸ்டுகளின் மக்கள் இராணுவமும் ஐ.நா. சபையின் கட்டுப்பாட்டில் முகாம்களில் இருத்தப்பட்டிருந்தன.


வாக்குச்சாவடிகள், பள்ளிகள் அல்லது கட்டிடங்களுக்குள் அமைக்கப்படவில்லை. மாறாக, எல்லா வாக்குச்சாவடிகளும் திறந்தவெளியிலேயே இருந்தன. மக்கள் வாக்குச்சீட்டில் முத்திரையிடும் இடத்தில் மட்டும் சிறிய தடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தலில் யாரும் இரகசியமாக முறைகேடு எதிலும் ஈடுபட முடியாது என்பது இவ்வாறு உத்திரவாதம் செய்யப்பட்டிருந்தது.


சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவான பின்தங்கிய நாடு நேபாளம். கூடுதலாக, தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு தேர்தல் நாட்களில் நேபாளம் முழுவதும் வாகனப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலும் 65% முதல் 75% வரை வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்பது, மன்னராட்சியை அகற்றுவதிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் மக்களுக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.


நாங்கள் பார்வையிட்ட சித்வான் மாவட்ட பீம்நகர் வாக்குச்சாவடியில், முதல் வாக்களிக்கும் உரிமையை மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து "மன்னராட்சிக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த தியாகத் தோழர் சலீமின் குடும்பத்திற்கு அந்தப் பகுதி மக்கள் வழங்கினர் என்பது நெகிழ வைப்பதாக இருந்தது. கிராமப்புறங்களில் தொடங்கி தலைநகர் காட்மண்டு வரை எல்லாப் பகுதிகளிலும் மாவோயிஸ்டுகளுக்கு அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் இருந்த செல்வாக்கு வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருந்தது. தலைநகர் காட்மண்டுவில் நேபாள அரசின் இராணுவத்தினருக்கான வாக்குச்சாவடி ஒன்றில் 187 வாக்குகள் மாவோயிஸ்டுகளுக்கு அளிக்கப்பட்டிருந்ததை நேபாளப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன.


தற்போது நடைபெற்றுள்ள இந்தத் தேர்தலில் மாவோயிஸ்டுகள் தனிப்பெரும்பான்மை என்ற அளவிற்கு வெற்றி பெற்று வருகின்றனர். எனினும் தற்போது அமையவிருப்பது ஒரு இடைக்கால அரசாங்கம் மட்டுமே. 2010ஆம் ஆண்டு வரை இந்த இடைக்கால அரசு ஆட்சியில் இருக்கும். அதற்குள் அரசியல் நிர்ணய சபை, நேபாளத்துக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும். பின்னர் அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், நேபாளக் குடியரசின் முதல் தேர்தல் நடைபெறும்.


சர்வதேச தேர்தல் பார்வையாளர்களை மாவோயிஸ்டுக் கட்சித் தலைவர் தோழர் பிரசண்டா 12.4.08 அன்று சந்தித்தார். தாங்கள் தனிப்பெரும்பான்மை பெற்றாலும், பிற கட்சிகளுடன் இணைந்த ஒரு கூட்டரசை அமைப்பதற்கே விரும்புவுதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இத்தனைக் குப் பிறகும், அமெரிக்க அரசு நேபாள மாவோயிஸ்டு கட்சியைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில்தான் இன்னமும் வைத்திருக்கிறது. நேபாள மன்னராட்சி அகற்றப்படக் கூடாது என்பதற்காக அமெரிக்க அரசு தொடர்ந்து முயன்று வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேபாளத்தில் ஒரு ஜனநாயக மக்கள் குடியரசு அமைவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடும் என்பதில் ஐயமில்லை.


உலகெங்கும் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது, ஜனநாயகத்தை சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க அரசு, நேபாளத்திலும் தனது கைவரிசையைக் காட்டும். அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையை இந்திய அரசு வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். மன்னராட்சியைத் துடைத்து அகற்றுவதற்கு நேபாள மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு இந்திய மக்கள் துணை நிற்க வேண்டும் என்று கோருகிறோம்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
 தமிழ்நாடு.