9_2006.jpg

 1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளைக்காரன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசிகளான காங்கிரசிடமும் முஸ்லிம் லீகிடமும் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். அந்தப் போலி சுதந்திரத்துக்கு வயது 60.

இன்று வாயளவில் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல், வெளிப்படையாகவே நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன, ஏகாதிபத்திய வல்லரசுகள். தற்போது நம்மீது திணிக்கப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் உண்மையான பொருள் மறுகாலனியாதிக்கம் என்பதுதான்.

 

கடந்த காலத்தின் காலனியாதிக்கக் கொடுமைகளைப் பூதக் கண்ணாடியால் பெருக்கிக் காட்டியதைப் போல இன்று நம் கண்முன்னே காட்சி தருகிறது மறுகாலனியாதிக்கம். இதற்கெதிராக நம்மைப் போராடத் தூண்டும் உந்து விசையாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக 200 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளைக் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராக வீரச்சமர் புரிந்திருக்கிறார்கள் தென்னகத்தின் வீரர்கள்; தமிழகத்தின் வீரர்கள்!


1801 ஜூன் மாதம் திருச்சியிலிருந்து சின்னமருது வெளியிட்ட பிரகடனம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்கே குரல் கொடுத்த இந்த அறிக்கைதான் முதல் விடுதலைப் போர்ப் பிரகடனம்! 1795இல் வெள்ளையருக்கு எதிராக திப்புசுல்தான் நடத்திய போரில் தொடங்கி, 1806இல் வேலூர்க் கோட்டைச் சிறையில் சிப்பாய்கள் நடத்திய புரட்சிவரை நீடித்த இந்தப் போர்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்!


""விடுதலைப் போரில் முதல் குரல் எழுப்பிய தமிழகத்திலிருந்து இன்றைய மறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போரும் துவங்கட்டும்! விடுதலைப் போராளிகளின் வரலாறு நம்மை முன்னோக்கிச் செலுத்தும் உந்து விசையாகட்டும்! 180001இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்திய சுதந்திரப் போரின் மரபை உயர்த்திப் பிடிப்போம்! ஆகஸ்டு 15 போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம்! மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!'' என்ற முழக்கங்களுடன் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் கடந்த 14.8.06 அன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

 

செங்கொடிகள் ஒளிர, முழக்க அட்டைகள் பதாகைகள், விடுதலைப் போராளிகளின் உருவப் படங்களைக் கையிலேந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, கடலூர், சிவகங்கை, திருவாரூர், ஓசூர் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பல்வேறு பகுதிகளில் போலீசு அனுமதி தராமல் அடாவடி செய்ததால் ஆர்ப்பாட்டங்களை இவ்வமைப்புகள் நடத்த இயலவிலலை. வீரவணக்கப் பாடல்கள், இளஞ்சிறுவர்களின் புரட்சிகரப் பாடல்கள், மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வரலாறையும் காந்தி காங்கிரசின் துரோக வரலாறையும் இன்றைய மறுகாலனியாதிக்கத்தின் கொடூரத்தையும் நாட்டு விடுதலைக்காக நாம் போராட வேண்டிய அவசியத்தையும் விளக்கிய முன்னணியாளர்களின் எழுச்சிமிகு உரைகள், கோக்பெப்சியின் தண்ணீர்க் கொள்ளையை விளக்கும் நாடகம், உணர்ச்சிமிக்க முழக்கங்கள் என போலி சுதந்திரத்தைத் திரைகிழித்து போராட அறைகூவுவதாக இந்த ஆர்ப்பாட்டங்கள் அமைந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஜனநாயக உணர்வும் கொண்ட பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள் கலைஞர்கள், தொழிற்சங்க விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

 

15.8.06 அன்று உசிலம்பட்டி வட்டார வி.வி.மு.வினர், இப்பகுதியில் வி.வி.மு.வை நிறுவப் பாடுபட்ட தோழர் நல்லு அவர்களின் நினைவு நாளையொட்டி, ஆரியப்பட்டி கிராமத்தில் கொடியேற்றி வீரவணக்க அஞ்சலி செலுத்தி போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்தி உரையாற்றியதோடு, செல்லம்பட்டி, கருமாத்தூர், செங்காணூரணி ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராட அறைகூவினர்.

 

திருச்சியில், 15.8.06 அன்று திருவரங்கம், உறையூர், அரவானூர், எடமலைப்பட்டிப் புதூர், திருவரம்பூர் ஆகிய பகுதிகள் உள்ளிட்ட 22 இடங்களில் போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்தியும் விடுதலைப் போராளிகளின் தியாக வரலாற்றை விளக்கியும் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராட அறைகூவியும் தெருமுனைக் கூட்டங்களை இப்புரட்சிகர அமைப்புகளும் தோழமை சங்கங்களும் இணைந்து நடத்தின. அனைத்து இடங்களிலும் உழைக்கும் மக்கள் இப்பிரச்சாரத்தை உற்சாகமாக வரவேற்றதோடு, தேநீர், சோடா, உணவு, நன்கொடை என ஆர்வத்தோடு வழங்கி ஆதரித்தனர்.

 

ஆகஸ்டு 15 போலி சுதந்திரம்தான் என்று வாயளவில் பேசும் போலி கம்யூனிஸ்டுகளும் பிற அமைப்புகளும் அதை மக்களிடம் அம்பலப்படுத்தக் கூட முன்வராமல் முடங்கிவிட்ட நிலையில், புரட்சிகர அமைப்புகளின் இந்த ஆர்ப்பாட்டங்களும் தெருமுனைக் கூட்டங்களும் மறைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வரலாறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, போலி சுதந்திரத்தைத் திரைகிழித்து, மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக நாட்டுப்பற்றுடன் போராட அணிதிரட்டும் விரிவான பிரச்சார இயக்கமாக அமைந்தன.

 

பு.ஜ. செய்தியாளர்கள்.