10_2006.jpg

தோழர் பகத்சிங்கின் நூறாம் ஆண்டு பிறந்த தினம் செப்.28, 2006 அன்று தொடங்குகிறது. அவரது நூற்றாண்டு பிறந்ததினத்தை, காங்கிரசு, பா.ஜ.க. முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைத்து வண்ண ஓட்டுக் கட்சிகளும், "கோலாகலமாக'க் கொண்டாடுவார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவுகூர்ந்து எட்டப்பன்

 அஞ்சலி செலுத்தினால் எத்துணை அருவெறுக்கத்தக்கதாக இருக்குமோ, அத்துணை நயவஞ்சகமானது ஓட்டுக் கட்சிகள் பகத்சிங்கிற்கு அஞ்சலி செலுத்துவது.

 

ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதி, சாதிமத அடையாளங்களை முற்றாக விலக்கிய மதச்சார்பின்மை, விஞ்ஞான சோசலிசத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை பகத்சிங்கின் அடையாளம் என்பது இவைதான். ஆனால், ஓட்டுக் கட்சிகளோ இப்புரட்சிகரமான அரசியல் உள்ளடக்கத்தை பகத்சிங்கிடமிருந்து நீக்கிவிட்டு, அவரை பூசையறைப் படமாக மாற்றிவிட முயலுகின்றன. பகத்சிங்கின் அரசியல் பேராளுமை, இப்படி துரோகிகளால் சிறுமைப்படுத்தப்படுவதை நாம் ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது.

காலனியாதிக்கத்தைவிடக் கொடிய மறுகாலனியாதிக்கம் நம்மை அடிமைப்படுத்திவரும் இன்றைய சூழலில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைப் போர்க்குணத்தோடு முன்னெடுத்துச் செல்வதுதான், நாட்டு விடுதலைக்காக தூக்குக் கயிறை முத்தமிட்ட போராளி பகத்சிங்கிற்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாக இருக்க முடியும்.


நூற்றாண்டு கடந்த பின்னரும் இந்திய விடுதலையின் கலங்கரை விளக்கமாய் ஒளிவீசிக் கொண்டிருக்கும் பகத்சிங்கின் தியாகம்; காலனியாதிக்கவாதிகளைக் கதிகலங்க வைத்த அவரது மாவீரம்; போராட்டத்தில் உறுதி ஆகிய அவரது உயரிய கம்யூனிசப் பண்புகளை வழுவாமல் பின்பற்றுவோம்! ஏகாதிபத்தியத்தையும், மறுகாலனியாதிக்கத்தையும் வீழ்த்தி நாட்டை விடுதலை செய்யும் மகத்தான பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம் என்று இந்நாளில் உறுதியேற்போம்!

ஓங்கட்டும் பகத்சிங்கின் புகழ்! ஒழியட்டும் மறுகாலனியாதிக்கம்! மலரட்டும் புதிய ஜனநாயக இந்தியா!

 

ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.