12_2006.jpg

கடந்த 21.10.06 அன்று அதிகாலை கூடலூரைச் சேர்ந்த வி.வி.மு. தோழர் திருப்பதிராயர், திடீர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார்.

 

தன்னுடைய கல்லூரிக் காலத்திலேயே தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை ஏற்று ஊக்கமுடன் செயல்பட்ட தோழர் திருப்பதிராயர், திராவிட கழகத்தின்

 தீவிர ஆதரவாளராக இருந்தார். பின்னர், சமுதாய விடுதலையை தனது இலட்சியமாகக் கொண்டு, நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தின் தன்னை இணைத்துக் கொண்டு, 1980களில் சி.பி.ஐ. (எம்.எல்) வினோத் மிஸ்ரா குழுவின் மதுரை நகரச் செயலராக இயங்கினார். அவ்வமைப்பின் புரட்டல்வாதப் பாதையை மறுதலித்து, 1993இல் விவசாயிகள் விடுதலை முன்னணியில் இணைந்து, தனது இறுதி மூச்சு வரை உறுதியாகச் செயல்பட்டார்.

 

தோழர் திருப்பதிராயரின் வாழ்வையும் வி.வி.மு.வின் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அவர் வி.வி.மு.வின் பிரிக்க முடியாத அங்கமாக, முன்னோடியாக இயங்கினார். அமைப்பு தலையிடும் சிறிய விவகாரத்திலிருந்து பெரிய பிரச்சினைகள் வரை போலீசு நிலையம், அதிகார வர்க்கம், நீதிமன்றம் வரை எங்குமே அவர் அமைப்பின் கொள்கையை, கௌரவத்தை இம்மியளவும் விட்டுக் கொடுத்ததில்லை. முன்னோடியாகச் செயல்பட்ட போதிலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளைக் கையாள்வதில் தலைசிறந்தவர் என்று பலராலும் பாராட்டப்பட்ட போதிலும், தலைக்கனமோ இறுமாப்போ ஒருக்காலும் அவரை அண்டியதே இல்லை. மலைபோல் நின்று அமைப்பைப் பாதுகாத்து வளர்த்த 47 வயதான அத்தோழரின் திடீர் மரணம், ஈடு செய்ய முடியாத பேரழிப்பாகும்.

 

தோழரின் மரணச் செய்தி அறிந்து, மதுரை, தேனி மாவட்டங்களிலிருந்து அமைப்புத் தோழர்களும், நண்பர்களும், உறவினர்ரகளும் திரண்டு மரியாதை செலுத்தியதோடு, செங்கொடி போர்த்தி இறுதி ஊர்வலம் நடத்தி இடுகாட்டில் இரங்கல் கூட்டம் நடத்தினர். கண்ணீர் மல்க உரையாற்றிய அனைவரும் தோழரின் உயர்ந்த கம்யூனிசப் பண்புகளை வழுவாமல் பின்பற்றவும், அவரது புரட்சிகர கனவை நனவாக்கப் பாடுபடவும் உறுதியேற்று அஞ்சலி செலுத்தினர்.


தோழர் திருப்பதிராயரின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
— விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி மாவட்டம்.