04_2008.jpg

""இப்படிக் கடன் தள்ளுபடி ஆவது, பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல; கடன் வாங்கியவர்களின் பொறுப்புணர்வு வளர்வதற்கும் உகந்தது அல்ல. இன்று கடன் வாங்கினால், நாளை அது தள்ளுபடி என்ற வழக்கம், ஊதாரித்தனத்தையும் நேர்மையின்மையையும் வளர்க்கும்; பொருளாதாரத்தையும் நசுக்கும்'' என துக்ளக் ""சோ'' எழுதுகிறார்.

 இது அவரின் சொந்த கருத்து மட்டுமல்ல. விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த விமர்சனம் என்ற பெயரில் மேட்டுக்குடி கும்பலின் வர்க்க வெறுப்பும், பொச்சரிப்பும் இப்படித்தான் பொங்கி வழிகிறது.


ஒரு 60,000 கோடி ரூபாய் தள்ளுபடி (இதுவே ஃபிராடு என்பது தனிக்கதை) குறித்து இப்படி அங்கலாய்த்துக் கொள்ளும் ""சோ'' வகையறாக்கள், ஒவ்வொரு ஆண்டும் வரிச் சலுகை என்ற பெயரில் பல பத்தாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், தரகு முதலாளிகள் மேல்தட்டு வர்க்கத்திற்காகத் தள்ளுபடி செய்யப்பட்டு வருவது குறித்து கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்.


கடந்த (200708) பட்ஜெட்டில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் 58,655 கோடி ரூபாய். இது, அதற்கு முந்தைய ஆண்டு ஏற்பட்ட இழப்பை விட 30 சதவீதம் அதிகமாகும்.


பங்குதாரர் நிறுவனங்கள் உள்ளிட்ட பிற வர்த்தகத் தொழில் நிறுவனங்களுக்கு 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு
ரூ, 4,000 கோடி.


தனிப்பட்ட நபர்களுக்கு, 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரிச் சலுகையால் ஏற்பட்ட இழப்பு 38,000 கோடி ரூபாய்.


தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி வரிச் சலுகையால், 200708இல் அரசுக்கு ஏற்பட்ட வருமான வரி இழப்பு 88,000 கோடி ரூபாய்.


சுங்கவரி விதிப்பில் கொடுக்கப்பட்ட சலுகைகளால், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1.48 இலட்சம் கோடி ரூபாய்.


மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் கூட, பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் ""கார்ப்பரேட் வரி'' சராசரியாக 33.66 சதவீதமாக இருக்கும் பொழுது, இந்தியாவில் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் சராசரி ""கார்ப்பரேட் வரி'' 20.6 சதவீதம்தான்.


200708ஆம் ஆண்டுக்கான வரி வருமானத்தைத் தாக்கல் செய்துள்ள 3,28,000 நிறுவனங்களில், ஒரு சதவீதத்துக்கும் குறைவான, வருடத்திற்கு 50 கோடி ரூபாய் முதல் 500 கோடி ரூபாய்க்கும் மேல் இலாபமீட்டும் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட கார்ப்பரெட் வரி 19 சதவீதம்தான். தகவல் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த பி.பி.ஓ. நிறுவனங்கள், மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் மீது விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த சராசரி வரி 2.08 சதவீதம்தான். அதேசமயம், பொதுத்துறை நிறுவனங்கள் மீது 23.35 சதவீதம் கார்ப்பரேட் வரி விதிக்கப்பட்டுள்ளது.


ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் தரகு முதலாளிகளுக்கும், மேட்டுக்குடி கும்பலுக்கும் அளிக்கப்பட்ட பல்வேறு வரித் தள்ளுபடிகளால் அவர்கள் 200708இல் அடைந்துள்ள இலாபம் மட்டும் 2.79 இலட்சம் கோடி ரூபாய். வரி ஏய்ப்பின் மூலம் அவர்கள் அடிக்கும் கொள்ளை இந்தக் கணக்கில் சேராது.


2000க்கும் 2004க்கும் இடைபட்ட ஆண்டுகளில் மட்டும், பொதுத்துறை வங்கிகள் முதலாளித்துவ நிறுவனங்களுக்குக் கொடுத்திருந்த கடனில், ரூ.44,000/ கோடியை வாராக்கடன் என எழுதி தள்ளுபடி செய்துள்ளன. இந்தத் தள்ளுபடியால் பலன் அடைந்தவர்களுள், பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட கேதான் பாரேக் என்ற கிரிமினலும் அடங்குவான். அவன் வாங்கியிருந்த 60 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


200809ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரிச் சலுகையால், வருமான வரி கட்டும் 3.2 கோடி பேரில், ஒவ்வொருவருக்கும் அவரின் வருமானத்துக்கு ஏற்ப, ரூ.4,100/ முதல் ரூ.50,000/ வரை இலாபம் கிடைக்கும். இந்த இலாபம், கடன் தள்ளுபடியால் ஒவ்வொரு உழவனுக்கும் கிடைக்கப் போகும் பணச் சலுகையைவிட அதிகமாகும். ""இந்த வருமான வரிச் சலுகையால், இவர்கள் வெளிநாட்டுக்குச் சுற்றுலா போகலாம்; அல்லது இரண்டாவது கார் வாங்கி ஓட்டலாம்'' எனப் பொருளாதார நிபுணர்கள் குதூகலித்து எழுதுகின்றனர்.


விவசாயிகள் உயிர் வாழ்வதற்கும், நாட்டிற்கு உணவு கொடுப்பதற்கும் சலுகை கேட்டால், மேட்டுக்குடி கும்பலுக்கோ, அவர்களின் ஊதாரிசுகபோக வாழ்வுக்குச் சலுகைகள் வாரியிறைக்கப்படுகின்றன. விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் "கடன் தள்ளுபடி' ஊதாரித்தனம் என்றால், முதலாளிகளுக்குக் கொடுக்கப்படும் வரி மற்றும் கடன் தள்ளுபடியை என்னவென்பது?