sep_2007.jpg

ஓசூரை அடுத்துள்ள கெலமங்கலம், பைரமங்கலம், குண்டுமாரனப்பள்ளி, ஒன்னல்வாடி, அஞ்செட்டிப் பள்ளி, சனமாவு, அக்கொண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களின் விளைநிலங்களைப் பறித்து 3640 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் ஜி.எம்.ஆர். குழுமம் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இம்மண்டலத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

""லிட்டில் இங்கிலாந்து'' என்று வெள்ளைக்காரர்களால் காலனியாட்சிக் காலத்தில் அழைக்கப்பட்ட இப்பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரளவுக்கு செழிப்பான பகுதியாகும். இங்கு பெருமளவில் விளையும் வாழை, முட்டைக்கோஸ், உருளை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சென்னை, பெங்களூர் முதலான பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இத்தகைய வளமான விளைநிலங்களையும் விவசாயிகள் வாழ்வுரிமையையும் பறித்துவிட்டு, இங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கத் துடிக்கிறது தி.மு.க. அரசு.

 

இப்பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்படுவதற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, ஏறத்தாழ ஓராண்டு காலமாக, இப்பகுதியில் இயங்கிவரும் வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு விவசாயிகளிடம் விழிப்புணர்வூட்டி வந்தன. தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதும் இக்கிராமங்களில் வீச்சாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு விவசாயிகளை அணிதிரட்டின. இப்பிரச்சாரத்தால் உந்தப்பட்ட விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு கடந்த 17.8.07 அன்று அக்கொண்டப்பள்ளியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். விவசாயிகள் ஒப்புதலின்றி நிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என்று வட்டாட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் போராடும் மக்களை சமரசமப்படுத்த முயற்சித்தனர்.

 

இந்தப் பசப்பல்களை ஏற்க மறுத்த இப்பகுதிவாழ் விவசாயிகள் 23.8.07 அன்று விவசாய நிலங்களை தர மறுப்பதாகவும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பதாகவும் அறிவித்து ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். விவசாயிகளின் விழிப்புணர்வையும் போராட்டத்தையும் கண்டு அரண்டு போன அதிகார வர்க்கமும் போலீசும்,"தொழில் வளர்ச்சி பெருகும்; 70 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்' என்றெல்லாம் புளுகி எதிர்ப்பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இவற்றை அம்பலப்படுத்தி முறியடிக்கவும், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை விரட்டியடிக்கவும் வி.வி.மு.வினர் விவசாயிகளை அணிதிரட்டி வருகின்றனர்.

 

— விவசாயிகள் விடுதலை முன்னணி,
கிருஷ்ணகிரி மாவட்டம்.